நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் தாக்லே நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் தாக்லே 

தாழ்ச்சியுடன் கூடிய பணியின் மகத்துவத்தை காண்பிக்க

கர்தினால் தாக்லே : நம்முள் இறைவன் குடியிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டால் மட்டும் போதாது, நாம் அவருள் இணைந்திருக்க வேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அனைவருக்கும் பணியாளராக மாறிய நமதாண்டவரின் உண்மையில் நடைபோட்டு,  திருவழிபாட்டிலும், நற்செய்தியிலும், பிறரன்பிலும் பணிபுரிவதற்கான அர்ப்பணத்துடன் செயல்படுங்கள் என புதிய திருத்தொண்டர்களிடம் அழைப்புவிடுத்தார், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

உரோம் நகரின் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குருத்துவ மாணவர்கள் 24 பேரை திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்திய திருப்பலியில் மறையுரையாற்றிய, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் தாக்லே அவர்கள், இறையழைத்தலுக்கு துணிவுடன் பதிலுரைத்த அவர்களைப் பாராட்டியதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அவர்களின் குடும்பங்கள், மறைமாவட்டங்கள், ஆசிரியர்கள், மற்றும் குருத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளோருக்கும் தன் நன்றியை வெளியிட்டார்.

இந்தியா, சீனா உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த 24 பேரை, உரோம் நகர் புனித பேதுரு பெருங்கோவில் திருப்பலியில், திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்திய கர்தினால் தாக்லே அவர்கள், ஒவ்வொரு திருத்தொண்டரும், இயேசுவின் வாழும் அடையாளமாக உள்ளார் என கூறினார்.

இயேசுவைப்போல், ஒவ்வொரு திருத்தொண்டரும், அனைவருக்கும் ஆற்றும் தாழ்ச்சியுடன்கூடிய பணியில் தங்களை வெளிப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் கர்தினால் தாக்லே.

மே 2ம் தேதி, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் திராட்சை செடி, மற்றும் கிளைகள் குறித்து இயேசு கூறுவதை எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள்,  நம்முள் இறைவன் குடியிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டால் மட்டும் போதாது, நாம் அவருள் இணைந்திருக்க வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இயேசுவுக்குள் நாம் வாழ்வதன் பலனாகிய, தாழ்ச்சியுடன் கூடிய பணியின் மகத்துவத்தை இவ்வுலகிற்கு காண்பிக்கவேண்டும் என, புதிய திருத்தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார் கர்தினால் தாக்லே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2021, 14:58