அமேசான் மெய்நிகர் கூட்டத்தில் கர்தினால் செர்னி அமேசான் மெய்நிகர் கூட்டத்தில் கர்தினால் செர்னி 

அமேசான் மெய்நிகர் கூட்டத்தில் கர்தினால் செர்னி

வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Querida Amazonia மடலில், அவர் கண்டுள்ள கனவுகளை நனவாக்க, நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மீட்பின் வரலாற்றில் மக்களை வழிநடத்திவரும் இறைவன், பல்வேறு காலக்கட்டங்களில் நமக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவதற்காக அவருக்கு நன்றிகூறவேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், அமேசான் பகுதி ஆயர்கள் கூட்டத்தில் பேசினார்.

பிரேசில் நாட்டின் அமேசான் பகுதியில் பணியாற்றும் ஆயர்கள், மே 18, 19 ஆகிய இருநாள்கள் நடத்திய இணையவழி மெய்நிகர் கூட்டத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர் கர்தினால் மைக்கில் செர்னி அவர்கள் இவ்வாறு கூறினார்.

அமேசான் பகுதியை மையமாகக் கொண்டு, வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Querida Amazonia மடலில், அவர் கண்டுள்ள கனவுகளை நனவாக்க, நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று, கர்தினால் செர்னி அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

மே 18, இச்செவ்வாயன்று, இணைய வழி மெய்நிகர் வடிவில் நிகழ்ந்த 38வது இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் குழுவின் சந்திப்பில், ஆறு கர்தினால்கள், 50 ஆயர்கள் உட்பட, 85 பேர் கலந்துகொண்டனர் என்று, இக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.

CELAM என்றழைக்கப்படும் இக்குழுவின் தலைவரான, பெரு நாட்டின் பேராயர் Miguel Cabrejos அவர்கள், திருத்தந்தை வெளியிட்டுள்ள Querida Amazonia மடல், நம்மை மறுமலர்ச்சி பாதையில் பயணிக்க அழைப்பு விடுத்துவருகிறது என்று கூறினார்.

சமுதாயம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் திருஅவை என்ற நான்கு நிலைகளில் மறுமலர்ச்சியை உருவாக்கும் நோக்கத்துடன், திருத்தந்தை வெளியிட்டிருக்கும் இறைவாக்கினரின் கனவுகள், நாம் மேற்கொள்ளும் மறுமலர்ச்சியின் வழிகாட்டிகள் என்று பேராயர் Cabrejos அவர்கள், இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2021, 14:37