சர்க்கஸ் சாகச விளையாட்டுக்கள் சர்க்கஸ் சாகச விளையாட்டுக்கள்  

சர்க்கஸ் உலக நாளுக்கு கர்தினால் டர்க்சன் செய்தி

தாத்தா பாட்டிகளும், பேரப்பிள்ளைகளுமே, சர்க்கஸ் சாகச விளையாட்டுக்கள் நடைபெறும் வட்ட காட்சியரங்குகளுக்கு மிக அதிகமாகச் சென்று இரசிப்பவர்கள் - கர்தினால் டர்க்சன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், மிக அதிகமாகவே துயரங்களை எதிர்கொள்ளும், சர்க்கஸ் வட்டக் காட்சியரங்குப் பணியாளர்கள், தங்களின் கலையை, இயன்ற அளவில், சிறாரும், வயது முதிர்ந்தோரும் துன்புறும் இடங்களில் நடத்திக்காட்டுமாறு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 17, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட 11வது சர்க்கஸ் உலக நாளுக்கு, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், தாத்தா பாட்டிகளும், பேரப்பிள்ளைகளுமே, சர்க்கஸ் சாகச விளையாட்டுக்கள் நடைபெறும் வட்ட காட்சியரங்குகளுக்கு மிக அதிகமாகச் சென்று பார்ப்பவர்கள் என்றும், துரதிஷ்டவசமாக, இவர்களே, கோவிட்-19 பெருந்தொற்று  உருவாக்கியுள்ள நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவோர் என்றும் கூறியுள்ளார்.

சர்க்கஸ் விளையாட்டுகளை உண்மையான மகிழ்வோடு வழங்கும் அந்த விளையாட்டு வீரர்கள் போன்று, தாத்தா பாட்டிகளும், பேரப்பிள்ளைகளும், அத்தகைய மகிழ்வை அனுபவிக்கத் தாகமாக உள்ளனர் என்றுரைத்துள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், இக்காலக்கட்டத்தில், அசாதாரண முறையில் மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், இத்தகைய மகிழ்வு தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பெருந்தொற்று காலத்தில், சர்க்கஸ் விளையாட்டு வீரர்கள், எங்கெல்லாம் சென்று, தங்களின் கலைகளை வெளிப்படுத்துகிறார்களோ, அந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும், ஒளிவலைக்காட்சிகளை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைக்கு அனுப்பினால், அவற்றை அந்த அவை, திருத்தந்தைக்கு காட்டி மகிழும் என்றும், கர்தினால் டர்க்சன் அவர்களின் செய்தி கூறுகிறது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினரும், உலக சர்க்கஸ் கூட்டமைப்பின் கவுரவ தூதருமாகிய István Ujhelyi MEP அவர்கள், பெருந்தொற்று காலத்தில், சர்க்கஸ் விளையாட்டு வீரர்கள், எதிர்நோக்கும் துன்பங்களைச் சித்தரிக்கும் ஒளிவலைக் காட்சியை வெளியிட்டது, உள்ளத்தை உருக்குவதாக இருந்தது என்றும், அச்செய்தி கூறியுள்ளது. 

Monaco இளவரசி Stéphanie அவர்கள், உலக சர்க்கஸ் கூட்டமைப்பை ஊக்குவித்து, அந்த அமைப்பிற்குப் புரவலராகச் செயல்பட்டு வருவதை, 11வது சர்க்கஸ் உலக நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும், சர்க்கஸ் பணியாளர்களுக்கு, தன் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் 250 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்க்கஸ் விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2021, 15:06