விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் - கர்தினால் லூயிஸ் லதாரியா விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் - கர்தினால் லூயிஸ் லதாரியா 

ஒரே பாலின தம்பதியருக்கு ஆசீர் வழங்கமுடியாது

ஒரே பாலினத்தவர் தம்பதியராக சேர்ந்து வாழ்வதை ஆசீர்வதித்து, ஏற்க அருள்பணியாளர்களுக்கு அனுமதியில்லை - விசுவாசக்கோட்பாட்டுப் பேராயம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒரே பாலினத் தம்பதியர் சேர்ந்து வாழும் நிலையை, திருஅவையால் ஆசீர்வதிக்க முடியாது என்றுரைக்கும் விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் புதிய அறிக்கை, இது, அநீதியான பாகுபாடோ, அல்லது, தனி மனிதர்கள் மீதான தீர்ப்போ அல்ல என்பதையும் உறுதி செய்துள்ளது.

ஒரே பாலினத்தவர் சேர்ந்து வாழ்தலை ஆசீர்வதிக்கும் அதிகாரம் திருஅவைக்கு இல்லை என உரைக்கும் விசுவாசக்கோட்பாட்டுப் பேராயம், மார் 15 இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், ஒரே பாலினத்தவர் தம்பதியராக சேர்ந்து வாழ்வதை ஆசீர்வதித்து, ஏற்க அருள்பணியாளர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கிறது.

திருத்தந்தையின் அனுமதியைப் பெற்று, விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் லூயிஸ் லதாரியா, மற்றும் அதன் செயலர் பேராயர் ஜியாக்கொமோ மொராண்டி ஆகியோரின் கையெழுத்துக்களுடன் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை, ஒரே பாலினத்தவர் தம்பதியராக வாழ்வதை ஆசீர்வதிப்பதை தடைசெய்யும் அதேவேளை, ஒரே பாலின நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை புரிந்துகொண்டு அவர்களை திருஅவைக்குள் வரவேற்று, விசுவாச வாழ்வில் வளர துணை நிற்பதை ஊக்குவிப்பதாகவும் எடுத்துரைக்கிறது.

ஒரே பாலின தம்பதியர் நிலையை ஆசீர்வதிக்க மறுப்பது, தனிமனிதர்கள் மீதான தீர்ப்போ, அல்லது பாகுபாட்டு நிலையோ அல்ல, என்று கூறும் இவ்வறிக்கை, மாறாக, ஒரே பாலின நோக்குடையவர்களை, திருஅவை, எப்போதும் புரிந்துகொண்டு, வரவேற்று, கருணையுடன் அவர்களை அணுகுவதாக எடுத்துரைக்கின்றது.

திருமணத்தில் தம்பதியர் ஆசீர்வதிக்கப்படுவது, அருளடையாளத்தோடு தொடர்புடையது என்பதால், திருமணத்திற்கு வெளியே சேர்ந்து வாழ்வோரும், இந்த அருளடையாள ஆசிரைப் பெறமுடியாது என்பது குறித்தும், விசுவாசக்கோட்பாட்டுப் பேராய அறிக்கை விளக்கியுள்ளது.

ஒரே பாலினத் தம்பதியரை ஆசீர்வதித்தல் என்பது, திருமணம் எனும் அருளடையாளத்தோடு இணைக்கப்பட்டு, பெருங்குழப்பத்தை விளைவிக்கும் அபாயம் இருப்பதையும், இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2021, 14:48