வயலில் வேலைசெய்யும் பெண் வயலில் வேலைசெய்யும் பெண் 

பெண்களின் திறமைகளைப் பயன்படுத்தல், அமைதிக்கு உதவும்

தொழில் சந்தையில் பெண்களின் பங்கேற்பு நலிவுற்ற நிலையிலேயே இன்னும் உள்ளது என்பதை கொரோனா பெருந்தொற்று வெளிப்படுத்தியுள்ளது - அருள்பணி உர்பான்சிஸ்க்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பொது வாழ்வின் தலைமைத்துவப் பணிகளில், பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்போது, அவர்களால், அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் சிறந்த பங்களிப்பை அளிக்கமுடியும் என்று, திருப்பீட அதிகாரி ஒருவர், OSCE எனப்படும், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பு நடத்திய கூட்டமொன்றில் கூறினார்.

OSCE அமைப்பில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் அவர்கள், அந்த அமைப்பின் பொருளாதாரம் மற்றும், சூழலியல் குழு, பிப்ரவரி 15, இத்திங்களன்று நடத்திய மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றியபோது, சிறந்ததொரு வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கு பற்றிக் குறிப்பிட்டார்.

பொருளாதாரம், மற்றும், அரசியல் துறைகளில், பெண்களின் தலைமைத்துவம் அதிகரிக்கப்பட்டு, பொதுவாழ்வில் அவர்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டால், அவர்கள் வாழ்கின்ற சமுதாயத்திலும், உலகிலும், அமைதி மற்றும், பாதுகாப்பை வளர்க்க, அவர்களால் அதிகம் உதவமுடியும் என்று, அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் எடுத்துரைத்தார்.

பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை ஊக்குவிப்பதற்கு, OSCE அமைப்பு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள்,  சிறந்ததொரு வருங்காலத்தை உருவாக்குவதற்கு, ஆண்களும், பெண்களும் இணைந்த   ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது என்பதை வலியுறுத்தினார்.

தொழில் சந்தையில் பெண்களின் பங்கேற்பு நலிவுற்ற நிலையிலேயே இன்னும் உள்ளது என்பதை கொரோனா பெருந்தொற்று வெளிப்படுத்தியுள்ளது என்று கூறிய, அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், வாழ்வு மற்றும், தொழில் துறைகளில், பெண்களின் திறமைகள் பயன்படுத்தப்பட்டால், அது அவர்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பாதுகாப்பு, நிலையானதன்மை, மற்றும், நீடித்த வளர்ச்சியையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2021, 15:16