வத்திக்கான் வானொலியின் ஒலிபரப்பு வத்திக்கான் வானொலியின் ஒலிபரப்பு  

வத்திக்கான் வானொலி 90 ஆண்டு கால பணி - தொர்னியெல்லி

திருத்தந்தையின் குரலையும், எண்ணங்களையும் உலக மக்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், தொலைநோக்குப் பார்வையுடன், வத்திக்கான் வானொலி உருவாக்கப்பட்டது - திருத்தந்தை புனித 23ம் யோவான்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் குரலாக உலகில் பணியாற்றிவரும் வத்திக்கான் வானொலி, கடந்த 90 ஆண்டுகளாக, காலத்திற்கு ஏற்ற முறையில் தன்னையே வடிவமைத்து வந்துள்ளது என்றும், குறிப்பாக, இந்த கோவிட்-19 பெருந்தொற்று நேரத்தில் தனிப்பட்ட கவனத்துடன் செயலாற்றியது என்றும், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

வத்திக்கான் வானொலி, பிப்ரவரி 12, இவ்வெள்ளியன்று தன் 90 ஆண்டு கால பணியை நிறைவு செய்யும் வேளையில், இந்த வானொலியின் ஒரு சில சிறப்பு அம்சங்களை வெளிக்கொணரும் வகையில், தொர்னியெல்லி அவர்கள் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தையின் குரலையும், எண்ணங்களையும் உலக மக்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், தொலைநோக்குப் பார்வையுடன், வத்திக்கான் வானொலி உருவாக்கப்பட்டது என்றும், தன் ஆரம்ப காலத்திலிருந்து, அன்றன்றைய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்ய தயங்கவில்லை என்றும், திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் கூறிய சொற்களை, தொர்னியெல்லி அவர்கள் தன் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று, மக்களை அவரவர் இல்லங்களில் அடைத்து வைத்த வேளையில், வத்திக்கான் வானொலி, அவர்களது இல்லங்களுக்கு சென்று திருத்தந்தையின் திருப்பலியையும், முக்கிய வழிபாடுகளையும், உரைகளையும் வழங்கிவந்தது என்று தொர்னியெல்லி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆப்ரிக்காவின் நைஜர், மற்றும் மாலி நாடுகளில், மத தீவிரவாதிகளால் இரண்டு ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த அருள்பணி லுயிஜி மக்காலி (Luigi Maccalli) அவர்கள், அந்த இரு ஆண்டுகளில் தன்னிடம் இருந்த ஒரு பழைய வானொலி பெட்டியில், வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ஆறுதலும், உற்சாகமும் அடைந்தார் என்று கூறியதை, தொர்னியெல்லி அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவண்ணம், 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட இயேசு சபை அருள்பணி அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்களும், தான் கைதியாக இருந்தவேளையில், வத்திக்கான் வானொலி மட்டுமே வெளி உலகத்துடன் தனக்கு தொடர்பை உருவாக்கியது என்றும், தமிழ் ஒலிபரப்பை கேட்பதன் வழியே, தான், பல நன்மைகளை அடைந்ததாகவும், தமிழ் நிகழ்ச்சியொன்றில் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2021, 15:33