மியான்மாரில் தடுப்பூசி வழங்கப்படுதல் மியான்மாரில் தடுப்பூசி வழங்கப்படுதல் 

தடுப்பூசி மருந்து அனைவரையும் அடையவேண்டும்

தடுப்பூசி மருந்துகள், வர்த்தகப் போட்டிகள் இன்றி, காப்புரிமை போர்கள் இன்றி, அனைவரையும் சென்றடையும் வழிகளை உலக அரசுகளும், மருந்து நிறுவனங்களும் உறுதிசெய்ய வேண்டும் - காரித்தாஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்து அனைவரையும் அடையவேண்டும், இந்த முயற்சியில் யாரும் விடுபடக்கூடாது என்று, அனைத்துலக காரித்தாஸ் அமைப்பும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையும் அழைப்பு விடுத்துள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்று மனிதகுலத்தை வதைக்கத் துவங்கிய நேரம் முதல், சமுதாய விலகல், முகக்கவசம் என்ற எச்சரிக்கைகளை சென்ற ஆண்டு முழுவதும் மேற்கொண்டு வந்த நாம், இவ்வாண்டின் துவக்கம் முதல், தடுப்பூசி அனைவரையும் அடைவதை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று, இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் மற்றும் காரித்தாஸ் அமைப்பின் செயலர் திருவாளர் அலாய்ஸியஸ் ஜான் ஆகிய மூவரும் கையொப்பமிட்டுள்ள இவ்வறிக்கை, பிப்ரவரி 5, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

பெருந்தொற்று இவ்வுலகைச் சிதைத்துவந்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழியே, போர் நிறுத்தம், வறிய நாடுகளின் கடன்கள் நீக்கம், என்ற வேண்டுகோள்களையும், 'Fratelli tutti' திருமடல் வழியே மனித உடன்பிறந்த நிலையையும் கத்தோலிக்கத் திருஅவை, வலியுறுத்தி வந்துள்ளது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் தடுப்பூசி மருந்துகள், வர்த்தகப் போட்டிகள் இன்றி, காப்புரிமை போர்கள் இன்றி, அனைவரையும் சென்றடையும் வழிகளை உலக அரசுகளும், மருந்து நிறுவனங்களும் உறுதிசெய்ய வேண்டும் என்று காரித்தாஸ் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

"அனைவருக்கும் தடுப்பூசிகள்: நீதியான, நலமான உலகை உருவாக்க 20 அம்சங்கள்" என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை உருவாக்கியுள்ள வழிமுறைகளை அனைத்து அரசுகளும், நிறுவனங்களும் பின்பற்றவேண்டும் என்று இவ்வறிக்கையில் விண்ணப்பம் விடுக்கப்பட்டுள்ளது.

உலக நலவாழ்வு பாதுகாப்பை முன்னிறுத்தி, அனைத்து நாடுகளும் நடத்தவேண்டிய ஆலோசனைகள், தங்கள் நாட்டு மக்களின் நலவாழ்வை முன்னேற்றும் வண்ணம், வறிய நாடுகளின் கடன்களை நீக்குதல், ஒவ்வொரு நாட்டிலும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வழிகளை உறுதி செய்தல் போன்ற பரிந்துரைகளை, அனைத்துலக காரித்தாஸ் அமைப்பும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையும் முன்வைத்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2021, 15:56