கர்தினால் கர்ட் கோக் கர்தினால் கர்ட் கோக்  

ஒப்புரவு வரலாறின் ஓர் அங்கமாக மாற முடியும்

2021ம் ஆண்டு சனவரி 3ம் தேதி, மார்ட்டின் லூத்தர் அவர்கள், திருத்தந்தை பத்தாம் லியோ அவர்களால், கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து, விலக்கிவைக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரிவினையின் வரலாற்றை நம்மால் திரும்பப்பெற முடியாது, ஆனால், அது ஒப்புரவு வரலாறின் ஓர் அங்கமாக மாற முடியும் என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கர்ட் கோக் அவர்கள் கூறியுள்ளார்.

“ஏற்புடைமை கோட்பாடு பற்றிய கூட்டறிக்கை” (JDDJ) என்ற தலைப்பில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையும், லூத்தரன் உலக அவையும் இணைந்து, சனவரி 3, இஞ்ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கை பற்றி பேட்டியளித்துள்ள கர்தினால் கோக் அவர்கள், இந்த அறிக்கையின் முக்கியத்துவம் பற்றி விளக்கியுள்ளார்.

கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும், மோதல்களை விடுத்து, ஒன்றிணைதல் என்ற இலக்கை நோக்கி, செல்லும் முயற்சிகளை மேற்கொள்வதாக, இவ்விரு அமைப்பின் பிரதிநிதிகளும், இந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

1999ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட “ஏற்புடைமை கோட்பாடு பற்றிய கூட்டறிக்கை”, கத்தோலிக்க மற்றும், லூத்தரன் சபைகளுக்கிடையே ஒப்புரவை உருவாக்கும் பாதையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய முயற்சி என்றும், இது இவ்விரு சபைகளுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களின் கனி என்றும் கர்தினால் கோக் அவர்கள் கூறியுள்ளார்.

16ம் நூற்றாண்டில் திருஅவையில் பெரிய பிரிவினை ஏற்பட காரணமாக அமைந்த, ஒருவர் எவ்வாறு மீட்படைகிறார் என்ற கிறிஸ்தவத்தின் முக்கிய கேள்விக்குப் பதில் அளிப்பதாய் இது அமைந்துள்ளது என்றும், திருவருளால், கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பணியில் நம்பிக்கை வைப்பதால் மீட்படைகிறோம் என்றும், இந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக மெத்தடிஸ்ட் சபை, ஆங்லிக்கன் கூட்டமைப்பு, சீர்திருத்த சபைகளின் கூட்டமைப்பும் பின்னாளில் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டன என்றும், கர்தினால் கோக் அவர்கள் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு சனவரி 3ம் தேதி, திருத்தந்தை பத்தாம் லியோ அவர்களால், மார்ட்டின் லூத்தர் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து, விலக்கிவைக்கப்பட்ட 500ம் ஆண்டு நிறைவு இடம்பெற்றது என்றும், இது கத்தோலிக்க-லூத்தரன் சபைகளின் பிரிவினை வரலாற்றில், வேதனைநிறைந்த காயத்தைக் குறிக்கின்றது என்றும், கர்தினால் கோக் அவர்கள் கூறினார்.

மார்ட்டின் லூத்தர் அவர்கள் வெளியிட்ட Augsburg அறிக்கையின் 500ம் ஆண்டு, 2030ம் ஆண்டில் நிறைவடையும்போது, கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும், ஒப்புரவை நோக்கிச் செல்ல, அவ்வாண்டு உதவும் என்றும் கர்தினால் கோக் அவர்கள் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2021, 14:50