கர்தினால் லியனார்தோ சாந்த்ரி கர்தினால் லியனார்தோ சாந்த்ரி 

துன்ப காலத்தில் நம்பிக்கையின் அடையாளம்

ஏழைகளை எச்சூழலிலும் மறந்துவிடக்கூடாது என்ற திருத்தந்தையின் அழைப்பிற்கு இணங்க, இந்த கொள்ளைநோய் காலத்தில் உதவிகளை அதிகரித்துள்ளது கீழை வழிபாட்டு முறை திருப்பேராயம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு, தங்களுடன் இணைந்து பணியாற்றும் அமைப்புக்களுடன் ஆற்ற உள்ள பணிகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியனார்தோ சாந்த்ரி.

கீழை வழிபாட்டுமுறை பேராயம், மற்றும், கீழை வழிபாட்டு திருஅவைக்கு உதவும் அமைப்புக்களின் கூட்டமைப்பான Roaco அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கோவிட் கொள்ளைநோய் காலத்தில் மிகப்பெரிய அளவில் உதவிகளை திட்டமிட்டுள்ளதாக கூறும், கர்தினால் சாந்த்ரி அவர்களின் அறிக்கை, இவ்வுதவி, துன்பகாலத்தில், நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் என தெரிவிக்கிறது.

கோவிட் நோயால் துன்புறும் ஏழை மக்களுக்கு உதவுவதற்கென 95 இலட்சத்து 74 ஆயிரத்து 907 யூரோக்களை ஒதுக்கியுள்ளதாக உரைக்கும் அறிக்கை, அர்மேனியா, பெலாருஸ், பல்கேரியா, புனித பூமி, இந்தியா, லெபனான் உட்பட 25 நாடுகளின் ஏழை மக்கள் இதனால் பயன்பெறுவர் என தெரிவிக்கிறது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள அவசர கால உதவித்திட்டம், ஏழை நாடுகளை, குறிப்பாக, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்குப்பகுதி, மற்றும், இந்தியாவின் ஏழை மக்களை கருத்தில் கொண்டதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் எத்தியோப்பியா, மற்றும், எரிட்டிரியா நாடுகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்த உள்ளதாகவும், உலகின் எந்த நாடுகளில்  ஏழைகள் துன்புற்றாலும் அவர்களுக்கான திருஅவை உதவிகள் சென்றடைய உறுதி செய்யப்படும் எனவும் கர்தினால் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

பொருளாதார நிலையற்ற தன்மைகளை எதிர்நோக்கிவருகின்றபோதிலும், ஏழைகளை எச்சூழலிலும் மறந்துவிடக்கூடாது என்ற திருத்தந்தையின் அழைப்பிற்கு இணங்க, இந்த கொள்ளைநோய் காலத்தில் உதவிகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார், கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் சாந்த்ரி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2020, 15:06