கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்   கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்  

தடுப்பூசி மருந்துகள் குறித்து, வத்திக்கானின் 20 கருத்துக்கள்

எவ்வித பாகுபாடும் இன்றி, உலக மக்கள் அனைவரையும் பாதித்துள்ள இந்தக் கொள்ளைநோயைத் தடுக்கும் மருந்து, எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவரையும் அடைவது ஒன்றே நீதி – வத்திக்கான் அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயின் பாதகமான விளைவுகளுக்கு தீர்வுகாணும் நோக்கத்துடன், திருத்தந்தையின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டுள்ள வத்திக்கான் கோவிட்-19 கழகமும், பாப்பிறை வாழ்வு அறக்கட்டளையும் இணைந்து, இந்தக் கொள்ளைநோயைத் தடுக்கும் ஊசி மருந்துகள் குறித்து, 20 கருத்துக்கள் அடங்கிய ஓர் அறிக்கையை, டிசம்பர் 22, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோயினால், பொருளாதாரம், சமுதாயம், நலவாழ்வு, சுற்றுச்சூழல் என்ற தளங்களில், வறியோரும், நலிந்தோரும் பல எதிர்மறை விளைவுகளைச் சந்திப்பர் என்பதை மனதில் கொண்டு, அவர்கள் சார்பாக, நீண்டகால திட்டங்களை செயலாற்ற வத்திக்கானில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 கழகம், பாப்பிறை வாழ்வு அறக்கட்டளையோடு இணைந்து, கொள்ளைநோய் தடுப்பு ஊசி மருந்து விநியோகிக்கப்படுவதில் பின்பற்றப்படவேண்டிய நன்னெறி விதிமுறைகளை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

20 கருத்துக்கள் அடங்கிய இவ்வறிக்கை, அடிப்படை கொள்கைகளும், விழுமியங்களும்; ஆய்வுகளும், உற்பத்தியும்; விநியோகமும், மேலாண்மையும்; செயல் திட்டங்கள்; என்ற நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வித பாகுபாடும் இன்றி, உலக மக்கள் அனைவரையும் பாதித்துள்ள இந்தக் கொள்ளைநோயைத் தடுக்கும் மருந்து, எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவரையும் அடைவது ஒன்றே, நீதி என்பதையும், அதற்கு மாறாக, வறியோரை, மருத்துவ கண்டுபிடிப்புகளின் விளிம்புகளுக்கு தள்ளுவது, அநீதி என்றும், இவ்வறிக்கையின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது.

இந்த மருந்து யாருக்கு முதலில் கிடைக்கவேண்டும் என்ற முடிவில், செல்வம் மிகுந்தோருக்கும், சக்தி மிகுந்தோருக்கும் முதலிடம் வழங்குவது, நன்னெறி விழுமியங்களுக்கு எதிரான ஒரு முடிவு என்பதையும் இவ்வறிக்கை தெளிவாகியுள்ளது.

இந்த தடுப்பு மருந்தைக் குறித்த ஆய்வுகளில், கருச்சிதைவு செய்யப்பட்ட உயிர்களின் திசுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, நன்னெறி கேள்விகளை உருவாக்கியுள்ளது என்பதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மருந்தின் உற்பத்தியில், காப்புரிமை குறித்த ஆதிக்கத்தை ஒரு சில நிறுவனங்கள் முன்னிறுத்துவதும், நன்னெறிக்குப் புறம்பானது என்று கூறும் இவ்வறிக்கை, உயிர் காக்கும் மருந்துகளில் இத்தகைய தனியுரிமைப் போட்டிகள் எழுவதை, கத்தோலிக்கத் திருஅவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளது.

இந்த மருந்தைக் குறித்த பக்கவிளைவுகள் அனைத்தையும் வெளிப்படையாக விளக்கிக்கூறுவதும், இவ்வேளையில் மிக அவசியம் என்பதை, தன் செயல்திட்டங்கள் என்ற பகுதியில் இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2020, 15:02