சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் 

பாரிசிலிருந்து, மிலான் வழியே கிளாஸ்க்கோவுக்கு

நம்மிடையே நிலவும் தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு ஒரு மாற்றாக, நாம் பேணிக்காக்கும் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவதால் மட்டுமே தற்போதைய பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காணமுடியும் - கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து பாரிஸ் மாநகரில் முடிவுகள் எடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவேறிய பின்னரும், இந்த இலக்கை அடைவதற்கு நாம் மேற்கொண்டுள்ள பயணம், மலையேறும் ஓர் அனுபவமாகவே உள்ளது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் பன்னாட்டு கூட்டம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் கூறியுள்ளார்.

"காலநிலை மாற்றத்தைச் சமாளித்தல்: பாரிசிலிருந்து, மிலான் வழியே கிளாஸ்க்கோவுக்கு" என்ற தலைப்பில், டிசம்பர் 10, இவ்வியாழனன்று, உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கணணிவழி கூட்டம், கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கிய காணொளிச் செய்தியுடன் ஆரம்பமானது.

பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதரகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மெய்நிகர் கூட்டம், 2015ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடைபெற்ற பாரிஸ் உச்சி மாநாட்டை நினைவுறுத்தியதோடு, 2021ம் ஆண்டு கிளாஸ்க்கோ நகரில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற உலகக் கருத்தரங்கு மற்றும், அதற்கு தயாரிப்பாக இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறவிருக்கும் கூட்டம் ஆகியவற்றையும் நினைவுறுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.

கோவிட்-19 கொள்ளைநோய் மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளதுபோலவே, காலநிலை மாற்றம் உட்பட உருவாகியுள்ள உலகளாவிய பிரச்சனைகள் அனைத்திலும், பங்கேற்கும் அயலவர்களாய் நாம் மாறியிருக்கிறோமே தவிர, இன்னும் நம்மிடையே உடன்பிறந்த நிலை உருவாகவில்லை என்பதை, மீண்டும், மீண்டும் உணர்ந்து வருகிறோம் என்று கர்தினால் பரோலின் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நம்மிடையே நிலவும் தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு ஒரு மாற்றாக, பேணிக்காக்கும் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவதால் மட்டுமே தற்போதைய பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காணமுடியும் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்தினார்.

பேணிக்காக்கும் கலாச்சார மாற்றத்தைக் கொணர, நம்மிடையே, விழிப்புணர்வு, ஞானம் மற்றும் செயல்படுத்தும் மனஉறுதி ஆகிய மூன்று அம்சங்கள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த மூன்று அம்சங்களை தன் உரையில் விளக்கிக் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தைக் குறித்த விழிப்புணர்வு வளர்ந்துள்ளது எனினும், அந்த மாற்றத்தின் எதிர் விளைவுகளைக் குறைக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளும் அரசியல் மனஉறுதி நம்மிடையே உருவாகவில்லை என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

2015ம் ஆண்டு ஜூன் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய Laudato Si’ திருமடல் வெளியானதைத் தொடர்ந்து, கத்தோலிக்கத் திருஅவையில் மட்டுமல்லாமல், உலகின் பல நிறுவனங்களிலும், இயற்கை ஆர்வலர்கள் நடுவிலும், கூடுதலான ஆர்வமும், அர்ப்பணிப்பும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் காணொளிச் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2020, 15:17