தென் கொரியாவில் கத்தோலிக்கர் தென் கொரியாவில் கத்தோலிக்கர் 

கத்தோலிக்கரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கரின் விகிதம் மாறாமல், 17.73 விழுக்காடாக உள்ளது. உலக மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை ஓராண்டில் ஏறத்தாழ ஒரு கோடியே 60 இலட்சம் என்று அதிகரித்து, தற்போது அவ்வெண்ணிக்கை, 133 கோடியாக உயர்ந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 18, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், 94வது உலக மறைப்பரப்புப்பணி நாளை முன்னிட்டு, புள்ளிவிவரங்களை வெளியிட்ட, வத்திக்கானின் பீதேஸ் செய்தி நிறுவனம், 2017ம் ஆண்டைவிட, 2018ம் ஆண்டின் இறுதியில், 1 கோடியே 57 இலட்சத்து, 16 ஆயிரத்துக்கு, கூடுதலான கத்தோலிக்கர் இருந்தனர் என்று கூறியுள்ளது.

இந்த விவரங்களின்படி, 2018ம் ஆண்டில், 132 கோடியே, 89 இலட்சத்து, 93 ஆயிரம் கத்தோலிக்கர் இருந்தனர் என்று கூறும் பீதேஸ் செய்தி, ஐரோப்பாவில் 94 ஆயிரம், ஆப்ரிக்காவில் 92 இலட்சம், அமெரிக்காவில் 45 இலட்சம், ஆசியாவில் 18 இலட்சம், ஓசியானியாவில் 1 இலட்சத்து 77 ஆயிரம் என்று, கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. 

ஆயினும், உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கரின் விகிதம் மாறாமல், 17.73 விழுக்காடாக உள்ளது எனவும், உலக மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் திருஅவை, உலக அளவில் 73,164 பாலர் பள்ளிகள், 1,03,146 ஆரம்பப் பள்ளிகள், 49,541 உயர்நிலைப் பள்ளிகள், 5,192 மருத்துவமனைகள், 15,481 மருந்தகங்கள், 577 ஹான்சன் (தொழுநோயாளர்) நோயாளர் பாரமரிப்பு இல்லங்கள், 9,295 கருணை இல்லங்கள், 15,423 முதியோர் மற்றும், மாற்றுத்திறனாளர் இல்லங்கள் போன்றவற்றை நடத்துகின்றது. (Fides/CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2020, 15:17