திருத்தந்தையுடன், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் செயலரான பேராயர் Protase Rugambwa திருத்தந்தையுடன், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் செயலரான பேராயர் Protase Rugambwa 

கொள்ளைநோய்க்கு மத்தியிலும் மறைப்பணி தொடர்கின்றது

செபமாலை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதம் முழுவதும், வானொலி, மற்றும், சமுதாய ஊடகங்கள் வழியாக செபமாலை ஒலிபரப்பப்படும் - நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய், திருஅவையின் மறைப்பணியை அல்லது, உலக மறைப்பணி நாளை நோக்கிய பயணத்தை நிறுத்திவிடவில்லை என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயமும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் உலகளாவிய செயலகமும் கூறியுள்ளன.

வருகிற 18ம் தேதி உலகளாவியத் திருஅவையில், மறைபரப்புப்பணி உலக நாள் சிறப்பிக்கப்படுவதற்குத் தயாரிப்புக்கள் நடைபெற்றுவரும் இவ்வேளையில், மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலரான புனித குழந்தை தெரேசாவின் விழாவாகிய, அக்டோபர் 01, இவ்வியாழனன்று பீதேஸ் செய்தியிடம், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் செயலரான பேராயர் Protase Rugambwa அவர்கள் இவ்வாறு கூறினார்.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் நற்செய்தி அறிவிக்கப்பட்டுவருகிறது என்று, டான்சானியா நாட்டவரான, பேராயர் Rugambwa அவர்கள், கூறினார்.

உலகின் அனைத்துக் கண்டங்களிலும், குறிப்பாக, தற்போதைய உலகளாவிய கொள்ளைநோய் நெருக்கடி சூழலிலும், மறைப்பணியாளர்கள், துன்புறுவோரோடு அருகிலிருந்து பணியாற்றுகின்றனர் என்றுரைத்த, பேராயர் Rugambwa அவர்கள், இக்காலக்கட்டம், திருஅவையின் மறைப்பணிக்கு உகந்த காலம் என்று கூறினார்.

உலகெங்கும் கொள்ளைநோய் தாக்கியுள்ள இக்காலத்தில், மறைப்பணி, மனிதத் திறமையின் பலன் அல்ல, அது கடவுளுக்கு உரியது என்றும், அதை முன்னின்று இயக்குபவர் தூய ஆவியார் என்றும், கூறிய பேராயர் Rugambwa அவர்கள், கடவுள் முதல் முயற்சி எடுத்து தம் மகன் கிறிஸ்து இயேசுவை இந்தப் பணிக்கு அனுப்பியதால், இன்று, திருமுழுக்குப் பெற்ற நாம் எல்லாரும் இந்தப் பணியை ஆற்ற அழைக்கப்படுகிறோம் என்று கூறினார்.

இந்தக் கொள்ளைநோய் காலத்தில் ஒவ்வொரு கண்டத்திலும் திருமறையின் பணி எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை விளக்கியுள்ள பேராயர் Rugambwa அவர்கள், ஆசியாவில், விசுவாசிகள், கிறிஸ்துவின் அன்புப் பிரசன்னத்தை அனுபவிக்கின்றனர், அவரைப் புகழ்ந்துபாடி, அவர் தங்களைக் கைவிடமாட்டார் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.

செபமாலை

செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதம் முழுவதும், வானொலி, மற்றும், சமுதாய ஊடகங்கள் வழியாக செபமாலை ஒலிபரப்பப்படும் மற்றும், இதனால், விலகியிருத்தல் விதிமுறையில், ஆயிரக்கணக்கான குழுமங்கள் பலனடையும் என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயமும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் உலகளாவிய செயலகமும் கூறியுள்ளன. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2020, 14:00