கோவிட்-19 காலத்தில் இத்தாலிய காரித்தாஸ் கோவிட்-19 காலத்தில் இத்தாலிய காரித்தாஸ் 

கடும் வறியநிலையில் இருப்போருக்கு, உணவுபெறும் உரிமை பறிப்பு

இன்று உலகில் ஏறத்தாழ 23 கோடி மக்கள் பசிக்கொடுமையை எதிர்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட, 13 கோடிக்கும் அதிகம் - உலக உணவு திட்ட அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 16, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக உணவு நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிகளால், மிகவும் வறியநிலையில் வாழ்வோருக்கு, உணவு பெறும் உரிமை மறுக்கப்படுகின்றது என்று கூறியுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, போர்களை நிறுத்தி, நீடித்த நிலையான வேளாண்மை திட்டங்களில் சிறுதொழில்களை ஊக்குவித்து, உணவு பாதுகாப்பு வழங்கப்படவேண்டிய பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன் வழியாக, உணவு பாதுகாப்பின்மை பிரச்சனை நீக்கப்படவேண்டும் என்று, காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இன்று உலகில் ஏறத்தாழ 23 கோடி மக்கள் பசிக்கொடுமையை எதிர்கொள்கின்றனர் என்றும், இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட, 13 கோடிக்கும் அதிகம் என்றும், உலக உணவு திட்ட அமைப்பு கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்நிறுவனம், சுற்றுச்சூழலைப் பாதிக்காதவண்ணம் பயிரிடும் முறையையும் ஊக்குவித்து வருகிறது என்று, அந்நிறுவனத்தின் தலைமை பொதுச் செயலர் திருவாளர் அலாய்சியஸ் ஜான் அவர்கள் கூறியுள்ளார்.   

கோவிட்-19 கொள்ளைநோய் சூழலில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற மக்கள், உணவு பாதுகாப்பின்மை பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஜான் அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள,  "அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற தனது புதிய திருமடலின் உணர்வில், அடுத்திருப்பவர் மீது, குறிப்பாக, பசி மற்றும், வன்முறையால் ஒடுக்கப்பட்டிருப்போர் மீது தோழமை மற்றும், பொறுப்புணர்வை அதிகமாக வெளிப்படுத்துமாறு, திருவாளர் ஜான் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக அளவில், 165 கிளை அமைப்புக்களைக் கொண்ட உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், கோவிட்-19 கொள்ளைநோய், மேலும் பரவாமல் தடுப்பதற்கு உணவு பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை பலமுறை வலியுறுத்தி வந்திருப்பதையும், அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. (Zenit)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2020, 14:48