பேராயர் ஈவான் யூர்க்கோவிச் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் 

மக்களின் வளர்ச்சிக்குரிய உரிமைகள் குறித்து திருப்பீடம்

மக்களின் வளர்ச்சிக்குத் தேவையான சூழல்களை, தேசிய அளவிலும், அனைத்துலக அளவிலும் உருவாக்கித் தரவேண்டியது, நாடுகளின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் -19 கொள்ளைநோயால் எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வழிமுறைகளால் அனைவரும் பயன்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் ஈவான் யூர்க்கோவிச்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், வளர்ச்சிக்குரிய உரிமை குறித்து மனித உரிமைகள் அவையில் ஆற்றிய உரையில் இவ்வாறு விண்ணப்பித்தார்.

கோவிட் 19 கொள்ளைநோயால், சமுதாயத்திலும், உலக பொருளாதாரத்திலும், பெரும் நெருக்கடிகள் உருவாகியுள்ள இவ்வேளையில், ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகளின் அளவு குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், பல நிறுவனங்களை, தனியார்மயமாக்க, அரசுகள் முயன்றுவருவது, சமூகப்பணிகளை, இலாபம் ஈட்டும் ஒரு தொழிலாக மாற்றிவிடக்கூடும் என்ற கவலையையும், பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், வெளியிட்டார்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் பணிகளை, தனியார் மயமாக்குவதால் ஏற்படும் இழப்புகள் குறித்து, அரசுகள் சிந்திக்க வேண்டியது அவசியம் எனவும் அழைப்புவித்தார், பேராயர் யூர்க்கோவிச்.

மக்களின் வளர்ச்சிக்குத் தேவையான சூழல்களை தேசிய அளவிலும், அனைத்துலக அளவிலும் உருவாக்கித் தரவேண்டிய, நாடுகளின் கடமை குறித்து எடுத்துரைத்த பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், ஏழை நாடுகளின் குரல்கள், அதிகம் அதிகமாக செவிமடுக்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உலகமனைத்தின் வருங்காலத் தலைமுறையை மனதில்கொண்டு, நீடித்த, நிலையான, ஒருங்கிணைந்த வளர்சசித்திட்டங்கள் வகுக்கப்படுவதற்கு, தற்போது, இந்த கொள்ளைநோய்க் காலம் சரியான வாய்ப்பு எனவும், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் எடுத்துரைத்தார், பேராயர் யூர்க்கோவிச்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2020, 13:35