திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் (கோப்புப் படம்) திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் (கோப்புப் படம்) 

"ஒரே ஒரு திருஅவை" நூலுக்கு கர்தினால் பரோலின் அணிந்துரை

திருத்தந்தையர் வழங்கும் படிப்பினைகளில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும், தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இயல்பான தொடர்ச்சி உள்ளது - கர்தினால் பியெத்ரோ பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையர் வழங்கும் படிப்பினைகளில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும், தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இயல்பான தொடர்ச்சி உள்ளது என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் ஒரு நூலுக்கு எழுதிய அணிந்துரையில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 1, இச்செவ்வாயன்று, “Una Sola Chiesa” அதாவது, "ஒரே ஒரு திருஅவை" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூலுக்கு, கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கிய அணிந்துரையில், முன்னாள் மற்றும் இந்நாள் திருத்தந்தையரிடையே நிலவும் ஆன்மீக ஒன்றிப்பையும், மக்கள் தொடர்பில் அவர்கள் கொண்டிருந்து வேறுபட்ட பாணியையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.

நம்பிக்கை, புனிதம், திருமணம் ஆகியவை உட்பட பத்து தலைப்புக்களில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் வழங்கியுள்ள மறைக்கல்வி படிப்பினைகள், "ஒரே ஒரு திருஅவை" என்ற இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டு, குடும்பத்தை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையில், திருத்தந்தையரான புனித ஆறாம் பவுல், புனித இரண்டாம் யோவான் பவுல், மற்றும் 16ம் பெனடிக்ட் ஆகிய மூவரின் எண்ணங்களிலிருந்து மேற்கோள்கள் வழங்கியதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் அணிந்துரையில் குறிப்பிட்டு, எவ்வாறு திருத்தந்தையர் தங்கள் எண்ணங்களில் ஒரு தொடர்ச்சியைக் கொண்டுள்ளனர் என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

"உங்களிடம் காணப்படும் நன்மைத்தனம் என் உள்ளார்ந்த வாழ்வுக்கு பெரும் உறுதுணையாக உள்ளது. இந்த வத்திக்கான் தோட்டத்தில் உள்ள அழகு அனைத்தையும் விட, உமது நன்மைத்தனமே மிக அழகாக உள்ளது" என்று 2016ம் ஆண்டு, ஜூன் 28ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கூறியச் சொற்களை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் அணிந்துரையில் சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளார்.

272 பக்கங்களைக் கொண்ட “Una Sola Chiesa” என்ற இந்நூல், இத்தாலிய மொழியில், Rizzoli என்ற பதிப்பகத்தால், செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2020, 13:30