4வது வறியோர் உலக நாள் செய்தி,செய்தியாளர் கூட்டம் 4வது வறியோர் உலக நாள் செய்தி,செய்தியாளர் கூட்டம்  

4வது வறியோர் உலக நாளுக்கு திருத்தந்தையின் செய்தி

ஏழைகளின் பாதுகாவலராகிய பதுவை புனித அந்தோனியார் விழாவன்று திருத்தந்தையின் செய்தி வெளியிடப்பட்டிருப்பது, கடவுள் அருளின் துணைகொண்டு, நம்மால் வறியோருக்குத் தாராளமாய் கரங்களை நீட்ட முடியும் - பேராயர் ஃபிசிக்கெல்லா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நான்காவது வறியோர் உலக நாள் செய்தியை, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள் தலைமையிலான குழு ஜூன் 13, இச்சனிக்கிழமையன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.

இந்த நிகழ்வு, திருப்பீடத்திலுள்ள திருத்தந்தை 2ம் ஜான் பால் அறையில், வத்திக்கான் செய்தித்துறையின் யூடியூப் ஊடகம் https://www.youtube.com/c/VaticanNews வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் முதலில் பேசிய பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், பழங்கால சீராக்கின் ஞானம் நூலிலுள்ள, “ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடுங்கள்” (சீராக் 7:32) என்ற வார்த்தைகளோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நான்காவது வறியோர் உலக நாள் சிந்தனைகளை வழங்கியுள்ளார், இந்த நாள் வருகிற நவம்பர் 15ம் தேதி, உலகளாவியத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

உலகம் முழுவதும் கோவிட்-19 கொள்ளைநோய் தாக்கத்தை அனுபவித்துவரும்வேளை, திருத்தந்தையின் இச்செய்தி நேரடியாக இந்த உலகுக்குச் சொல்லப்பட்டுள்ளது என்று கூறிய பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள்,  சீராக்கின் ஞானம் நூலின் இறுதியில், அந்த நூலின் ஆசிரியரான ஞானமுள்ள மனிதர், ‘சீராக்கின் மைந்தர் ஏசு’ (சீராக் 50, 27), என்று தன்னை குறிப்பிடுகின்றார், திருத்தந்தையின் சிந்தனைகள், இந்த விவிலிய உருவக ஒளியில் வழங்கப்பட்டுள்ளன என்றுரைத்தார்.

கிறிஸ்துவின் பிறப்பிற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த ஞானமுள்ள மனிதர், ஞானத்தை எங்கே கண்டுபிடிப்பது மற்றும், வாழ்வின் நிகழ்வுகளுக்கு, எத்தகைய அர்த்தமுள்ள பதில்களை அது தர இயலும் என்பது பற்றிய கேள்வியையே கேட்டுள்ளார் என்ற பேராயர், இந்த கொரோனா தொற்றுக்கிருமி பரவல் மாதங்களில், இதே கேள்விதான் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்விலும் எழுந்துள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார் என்றார்.

இந்த கொள்ளைநோய் காலத்தில், செபம், இடைவிடாத ஒன்றாக மாறியுள்ளது, ஆனால் செபம்செய்துகொண்டிருந்தால் மட்டும் போதாது, வறுமையில் வாழ்பவர்களின் தேவைகள் மீது அக்கறை காட்டப்படவேண்டும் என்று, சீராக்கின் ஞானம் நூல் சொல்கிறது என்று,  பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் கூறினார். 

கடவுளின் சாயல் பதிந்துள்ள ஏழைகளின் முகத்தின் மீது கவனம் செலுத்துவது, மிகவும் முக்கியமானது, ஏனெனில், அது, நாம் கிறிஸ்தவ வாழ்வை முழுமையாக வாழ விரும்புகையில், நம்மை வேறு எந்தப் பக்கமும் நோக்கவிடாது என்று கூறினார்,   பேராயர் ஃபிசிக்கெல்லா.

இன்றைய உலகில் வளர்ச்சி அதிகமாக இருந்தும், கடுமையான ஏழ்மையும் நிலவுவது முரண்பாடாக உள்ளது என்பது பற்றிய திருத்தந்தையின் சிந்தனைகளை எடுத்துரைத்த பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், மாண்பை இழந்து துன்புறும் கடவுளின் பிள்ளைகளுக்கு உதவிசெய்ய கரங்கள் நீட்டப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தையின் இந்த செய்தி, ஏழைகளின் பாதுகாவலராகிய பதுவை புனித அந்தோனியார் விழாவன்று வெளியிடப்பட்டது பற்றிக் குறிப்பிட பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், இது, நம்பிக்கையாளரின் வாழ்வு மற்றும் மனித சமுதாயத்தின் வரலாற்றில் உடன்வரும் கடவுளின் அருள் வழியாக, நம்மால் வறியோருக்குத் தாராளமாய்  கரங்களை நீட்ட முடியும் என்பதை உணர்த்துகின்றது என்று கூறியுள்ளார். 

இப்போதைய கொள்ளைநோய் விதிமுறைகளை முற்றிலும் உணர்ந்தநிலையில், திருத்தந்தையின் நான்காவது வறியோர் உலக நாள் செய்தி, அந்த நாளுக்கு நம்மையே நாம் தயாரிக்க உதவும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று, பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், இணையதளம் வழியாக இடம்பெற்ற நேரடி ஒளிபரப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2020, 15:34