செய்தியாளர் கூட்டம் : புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள் செய்தி செய்தியாளர் கூட்டம் : புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள் செய்தி  

நாடுகளுக்குள்ளே புலம்பெயர்ந்திருப்பவர்கள், 5,08,00,000

2011ம் ஆண்டிலிருந்து போர் இடம்பெற்றுவரும் சிரியாவில், கோவிட்-19ம், கடும் வறுமையும் மக்களின் துன்பங்களை அதிகரித்துள்ளன. அந்நாட்டில் 80 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்குகீழ் வாழ்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் அமைப்பின் நேரடிப் பொதுச்செயலர் கர்தினால் Michael Czerny அவர்கள் தலைமையிலான குழு, மே 15, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள் செய்தியை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.  

மிகவும் நலிந்த மக்கள் பராமரிப்பு

செய்தியாளர் கூட்டத்தில் முதலில் உரையாற்றிய கர்தினால் Czerny அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாள் உருவான வரலாறு பற்றியும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த உலக நாளுக்கென வழங்கிவரும் செய்திகளின் தலைப்புகள் பற்றியும் விளக்கினார்.

இந்த உலக நாள், முதல் உலகப்போரால் (1914-1918) உலகு எதிர்கொண்ட பெருமளவு துன்பநேரத்தில், 1915ம் ஆண்டில் ஆரம்பமானது என்றும், அப்போர் முடிவடைந்த காலக்கட்டத்தில் இஸ்பானிய காய்ச்சல் கொள்ளைநோய் உலகைத் தாக்கியது என்றும் கூறிய கர்தினால் Czerny அவர்கள், தற்போது உலகு எதிர்கொள்ளும் கொள்ளைநோய் பற்றியும் நினைத்துப் பார்ப்போம் என்று கூறினார்.

வருகிற செப்டம்பர் 27ம் தேதி கடைப்படிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள், நாடுகளுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஆற்றவேண்டிய மேய்ப்புப்பணியின் அவசியம் பற்றி வலியுறுத்துகின்றது என்று கர்தினால் Czerny அவர்கள் கூறினார். 

இன்று உலகில் நாடுகளுக்குள்ளே புலம்பெயர்ந்த மக்கள், ஏறத்தாழ 5 கோடியே 8 இலட்சம்  என்றும், இவர்களில் 4 கோடியே 57 இலட்சம் பேர், போர் மற்றும் வன்முறையாலும்,  51 இலட்சம் பேர் பேரிடர்களாலும் புலம்பெயர்ந்தவர்கள் என்றும், சுட்டிக்காட்டினார், கர்தினால் Czerny.

JRS அமைப்பு

மேலும், இச்செய்தியாளர் கூட்டத்தில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, JRS எனப்படும் இயேசு சபையினரின் அமைப்பின் ஒத்துழைப்பாளர் முனைவர் Amaya Valcárcel அவர்கள், 56 நாடுகளில் பணியாற்றுகின்ற இந்த JRS அமைப்பு, 14 நாடுகளில் நாடுகளுக்குள்ளே புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றுகின்றது என்றும், பல்வேறு திட்டங்கள் வழியாக, அம்மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு உழைத்து வருகின்றது என்றும் அறிவித்தார்.

தேசிய சட்டங்களின் அடிப்படையில் அம்மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதை ஊக்குவித்து வருவதாக அறிவித்த Valcárcel அவர்கள், இன்று உலகில் 8 கோடிக்கும் அதிகமான மக்கள், கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ளனர் என்பதையும் எடுத்துரைத்தார்.  

மனித உரிமைகள் மீறப்படல், தனிமை, புறக்கணிப்பு, இன்னும், உணவு, தங்குமிடம் மற்றும் கல்வி ஆகியவை கிடைக்காமலும் துன்புறுகின்றனர் என்று விளக்கிய Valcárcel அவர்கள், இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு, இம்மக்களின் நிலைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவிசெய்ய முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார்.

சிரியாவில் பத்தாவது ஆண்டாக இடம்பெற்றுவரும் போரினால் 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள், சிரியாவிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்றும்., ஈராக் புலம்பெயர்ந்த மக்களுக்காக, 2008ம் ஆண்டில் சிரியாவில் உருவாக்கப்பட்ட JRS அமைப்பு, தற்போது அலெப்போவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 18 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறது என்று கூறினார், Valcárcel. 

சிரியாவில், கோவிட்-19ம், கடும் வறுமையும் துன்பங்களை அதிகரித்துள்ளன என்றும், அந்நாட்டில் 80 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்குகீழ் வாழ்கின்றனர் என்றும் கூறிய Valcárcel அவர்கள், மியான்மார், வெனெசுவேலா, கொலம்பியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றியும் விவரித்தார்.

மியான்மாரில் இடம்பெறும் உள்நாட்டுப் போரால், நாட்டுக்குள்ளேயே 4,50,000த்துக்கு அதிகமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2020, 15:46