கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதற்கு புதிய பாடம்

கர்தினால் தாக்லே : தற்போதைய சூழலில் காற்று மாசுக்கேட்டின் அளவு குறைந்துள்ளதையும், சில நாடுகளில் போர் நிறுத்தங்கள் இடம்பெறுள்ளதையும் எண்ணிப் பார்ப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இந்த கொரோனா தொற்று நோய்க் காலத்தில் அனைத்து மக்களும், நல ஆதரவுகளையும் சமூகப் பாதுகாப்பு நிலைகளையும் பெற உறுதிசெய்ய வேண்டியது அரசுகளின் கடமையாகிறது என அழைப்பு விடுத்தார், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவரான கர்தினால் தாக்லே அவர்கள் வெளியிட்டுள்ள உயிர்ப்புப் பெருவிழா செய்தியில், அரசுத்தலைவர்கள் அனைவரும் ஒன்றிப்பு, பொறுப்புணர்வு மற்றும், பகிர்வு எனும் சவாலை எதிர்கொள்ளும்விதமாக உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர், முதியோர், நோயுற்றோர், ஏழைகள், வேலையற்றோர் என வாழ்வின் கடைநிலையில் உள்ளோர், மேலும் அதிக அளவில் துன்பங்களை அனுபவிக்கும் நிலை, கோவிட்-19 கொள்ளை நோயால் உருவாகியுள்ளது என்ற கவலையை தன் செய்தியில் வெளியிட்டுள்ள கர்தினால், துயருறும் அனைவரையும் மனித மாண்புடன் மனிதகுல குடும்பத்திற்குள் வரவேற்று இணைக்கும் வண்ணம் அரசுகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றார்.

முந்தைய காலங்களில் தீர்வு காண முடியாததாக இருந்த சில பிரச்சனைகளுக்கு தற்போது மாற்றத்திற்குரிய நம்பிக்கையின் அடையாளங்கள் தெரிகின்றன என உரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், தற்போதைய சூழலில் காற்று மாசுக்கேட்டின் அளவு குறைந்துள்ளதையும், சில நாடுகளில் போர் நிறுத்தங்கள் இடம்பெறுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுவதும் முடக்கப்பட்டுள்ள இந்த நிலையில், நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழவேண்டியவர்கள் என்ற உள்ளுணர்வைப் பெற்றுள்ளோம் என  உரைத்துள்ள கர்தினால், கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பினர் இன்றைய சுழலில் ஆற்றிவரும் சிறப்புப் பணிகளைப் பாராட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2020, 13:52