லொரேத்தோ அன்னை மரியா லொரேத்தோ அன்னை மரியா 

லொரேத்தோ யூபிலி ஆண்டு டிச.8,2019-டிச.10,2020

1920ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், லொரேத்தோ அன்னை மரியாவை, விமான ஓட்டுனர்களின் பாதுகாவலராக அறிவித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

லொரேத்தோ அன்னை மரியா, விமான ஓட்டுனர்களின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அமல அன்னை விழாவாகிய டிசம்பர் 08, வருகிற ஞாயிறு முதல், 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வரை, லொரேத்தோ யூபிலி ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

“லொரேத்தோ யூபிலி: உயரப் பறக்க அழைப்பு” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும் லொரேத்தோ யூபிலி ஆண்டு பற்றி, டிசம்பர் 03, இச்செவ்வாயன்று, புதிய வழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள் தலைமையிலான குழு, செய்தியாளர்களிடம் விளக்கியது.

இந்த யூபிலி ஆண்டு துவங்கும் ஞாயிறன்று, லொரேத்தோ பெருங்கோவிலின் புனிதக் கதவை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் திறந்து வைத்து, இந்த புனித ஆண்டை ஆரம்பித்து வைப்பார்.

பழங்கால மரபுப்படி, இத்தாலியிலுள்ள லொரேத்தோ பெருங்கோவிலின் புனித வீட்டை, வானதூதர்கள் தூக்கி வந்தனர் என்றும், இதனால் தூண்டப்பட்டு, முதல் உலகப் போரில்  விமான ஓட்டுனர்கள், லொரேத்தோ அன்னை மரியாவை தங்கள் பாதுகாவலராகக் கொண்டனர் என்றும், அந்தக் காலத்தில், விமானங்கள், பறக்கும் வீடுகள் என அழைக்கப்பட்டன என்றும், செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

1920ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், லொரேத்தோ அன்னை மரியாவை, விமான ஓட்டுனர்களின் பாதுகாவலராக அறிவித்தார். அதற்கு மூன்று ஆண்டுகள் சென்று, 1923ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி, இத்தாலிய விமானப்படை உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2019, 15:34