ஜோர்டனில் இயேசு திருமுழுக்குப் பெற்ற இடத்திற்குத் திருப்பயணம் ஜோர்டனில் இயேசு திருமுழுக்குப் பெற்ற இடத்திற்குத் திருப்பயணம்  

இயேசு திருமுழுக்குப் பெற்ற இடம், 2020ல் திருப்பயணிகளுக்கு...

கர்தினால் சாந்த்ரி அவர்கள், ஜோர்டன் ஆற்றின் மேற்கு கரையில், இயேசு திருமுழுக்குப் பெற்றதாகச் சொல்லப்படும், Qasr Al-Yahud என்ற இடத்தைப் பார்வையிட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2020ம் ஆண்டு சனவரி மாதத்தில், இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடுவதற்கு, அவர் திருமுழுக்குப் பெற்ற இடத்தில் திருப்பயணிகள் அனைவரும் கூடுவோம் என்று, திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள் கூறினார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், அமைதி திருப்பயணமாக, எகிப்து சென்று, சுல்தான் அவர்களைச் சந்தித்த நிகழ்வின் 800ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களை, பிரான்சிஸ்கன் சபையினர் இவ்வாரத்தில் புனித பூமியில் சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, ஜோர்டன் ஆற்றுப் பக்கம் செல்வதும் ஒன்றாக இருந்தது.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கர்தினால் சாந்த்ரி அவர்கள், அக்டோபர் 2ம் தேதி, இப்புதனன்று, ஜோர்டன் ஆற்றின் மேற்கு கரையில், இயேசு திருமுழுக்குப் பெற்றதாகச் சொல்லப்படும், Qasr Al-Yahud என்ற இடத்தையும் பார்வையிட்டார்.

இவ்விடத்தில், சேதமடைந்த 9ம் நூற்றாண்டு சிற்றாலயம், 1950ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில், சிறிய பிரான்சிஸ்கன் துறவு இல்லமும் இருக்கிறது. 1967ம் ஆண்டு முதல், நிலக்கண்ணி வெடிகளால் நிறைந்திருந்த இவ்விடத்தில் அவை அண்மை ஆண்டுகளில் அகற்றப்பட்டுள்ளன.  

எனவே, இவ்விடம் 2020ம் ஆண்டில் மக்கள் பார்வையிடும் இடமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2019, 15:12