சிரியா பிரச்சனை பற்றிய கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் சந்திப்பு சிரியா பிரச்சனை பற்றிய கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் சந்திப்பு 

துயர் துடைப்பு, இரு மடங்காக அதிகரிக்க அழைக்கும் திருத்தந்தை

மக்களைக் கொல்லும் குண்டுகள் வீசப்படுவது நிறுத்தப்பட்டிருந்தாலும், வறுமை என்ற குண்டு தொடர்ந்து வீழ்வதால், சிரியா நாட்டில் தற்போது 80 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் - கர்தினால் மாரியோ செனாரி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா நாட்டு அரசுத்தலைவர் பஷார் அல்-அசாத் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம், அந்நாட்டு மக்களின் துயரங்களை தடுத்து நிறுத்துவதற்குரிய முயற்சிகளை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்று, அந்நாட்டில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் கூறினார்.

சிரியாவின் போரும் அழிவும் தரும் கவலை

சிரியா நாட்டின் அமைதிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் விண்ணப்பித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர் அசாத் அவர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களும், கர்தினால் செனாரி அவர்களும் அரசுத்தலைவரை நேரில் சந்தித்து வழங்கினர்.

இந்த மடலைக் குறித்து, கர்தினால் செனாரி அவர்கள், வத்திக்கான் செய்திக்கும், Sir செய்தி நிறுவனத்திற்கும் அளித்த பேட்டியில், சிரியாவில் முடிவின்றி தொடரும் சண்டையும், அந்நாட்டில் நிலவும் அழிவும், பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன என்று குறிப்பிட்டார்.

2ம் உலகப்போர் 7 ஆண்டுகள் சிரியா போர், 9 ஆண்டுகள்

1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு முடிய ஏழு ஆண்டுகள், இரண்டாம் உலகப்போர் நீடித்த காலத்தைத் தாண்டி, சிரியாவில் ஒன்பது ஆண்டுகளாக நீடிக்கும் போர், இரண்டாம் உலகப் போருக்கு அடுத்தபடியாக, பெருமளவு உயிர் சேதங்களையும் உருவாக்கி வருகிறது என்று கர்தினால் செனாரி அவர்கள் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள கடிதம் மக்களின் துயரங்களை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள விண்ணப்பம் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் செனாரி அவர்கள், குறிப்பாக, இத்லிப் (Idlib) பகுதியில், போரிடும் இரு தரப்பினருக்கும் இடையே சிக்கித் தவிக்கும் 30 இலட்சம் மக்களை மனதில் கொண்டு, திருத்தந்தை, தன் விண்ணப்பத்தை விடுத்துள்ளார் என்று கூறினார்.

வறுமை என்ற குண்டு தொடர்ந்து வீழ்வதால்...

மக்களைக் கொல்லும் குண்டுகள் வீசப்படுவது நிறுத்தப்பட்டிருந்தாலும், வறுமை என்ற குண்டு தொடர்ந்து வீழ்வதால், சிரியா நாட்டில் தற்போது 80 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்பதை, கர்தினால் செனாரி அவர்கள் தன் பேட்டியில் துயரத்துடன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2019, 14:48