கர்தினால் பரோலின் கர்தினால் பரோலின் 

திருப்பீடத்தின் அரசியல் உறவுகள், அமைதி முயற்சிகள்

உலகில் நிலவும் பிரச்சனைகள் அனைத்தும் ஏட்டளவு கருத்துக்கள் அல்ல, அவை ஒவ்வொன்றுக்கும் பின்னே மனித முகங்கள் உள்ளன, குறிப்பாக, குழந்தைகள், முதியோர் ஆகியோரின் முகங்கள் உள்ளன - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீடம் ஒவ்வொரு நாட்டு அரசுடனும் மேற்கொள்ளும் அரசியல் உறவுகள், அமைதியைக் கொணரும் முயற்சிகளாக உள்ளன என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இத்தாலியின் "Avvenire" செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

கர்தினால் பரோலின் - "Avvenire" பேட்டி

உரோம் நகரின் முக்கியத் திருநாள்களில் ஒன்றான புனித பேதுரு புனித பவுல் திருவிழாவையொட்டி, "Avvenire" செய்தித்தாள் கர்தினால் பரோலின் அவர்களுடன் மேற்கொண்ட ஓர் உரையாடல், ஜூலை 1, இத்திங்களன்று வெளியானது.

உலகெங்கும் நடைபெறும் குடிபெயர்தல், ஒவ்வொரு நாட்டிலும் பணியாற்றும் திருப்பீடத் தூதர்களுடன் திருத்தந்தை கொண்டுள்ள உறவு, ஜூலை 4, இவ்வியாழனன்று இரஷ்ய அரசுத்தலைவர் வத்திக்கானுக்கு வருகை தருவது போன்ற கருத்துக்களை, கர்தினால் பரோலின் அவர்கள் பேசினார்.

பிரச்சனைகளுக்குப் பின்னே உள்ள மனித முகங்கள்

உலகில் நிலவும் பிரச்சனைகள் அனைத்தும் ஏட்டளவு கருத்துக்கள் அல்ல, அவை ஒவ்வொன்றுக்கும் பின்னே மனித முகங்கள் உள்ளன, குறிப்பாக, வன்முறைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள், முதியோர் ஆகியோரின் முகங்கள் உள்ளன என்று திருத்தந்தை கூறிவரும் கருத்து, திருப்பீடம் மேற்கொள்ளும் பன்னாட்டு உறவுகள் முயற்சியின் முதல் அம்சமாக வெளியாகின்றது என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

விளிம்புகளைத் தேடிச் செல்லுதல் இரண்டாவது அம்சமாகவும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலேயே கவனம் செலுத்தாமல், பிரச்சனைகள் எழாமல் இருக்கும் சூழலை உருவாக்குதல் மூன்றாவது அம்சமாகவும் திருப்பீட உறவுகளில் விளங்குகின்றன என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த எண்ணங்கள் அனைத்தும், திருத்தந்தை வெளிப்படுத்திவரும் எண்ணங்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் உள்மன அமைதி

திருப்பீடத்தில் துவக்கப்பட்டுள்ள மாற்றங்கள், சீன அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உறவு ஆகிய விவகாரங்களில் உரசல்கள் எழுந்தாலும், இவற்றை உள்மன அமைதியுடன் திருத்தந்தை சந்திப்பது, திருப்பீடத்தில் பணியாற்றுவோருக்கு உந்துசக்தியாக விளங்குகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆயர்களின் நியமனத்தில் சீன அரசுடன் திருப்பீடம் அடைந்துள்ள ஒரு புரிதல், வரலாற்று சிறப்பு மிக்கது என்று குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இந்த உறவில் இன்னும் உறுதியான நிலை உருவாக, கூடுதல் முயற்சிகள் தேவை என்பதையும் எடுத்துரைத்தார்.

இரஷ்யாவின் புடின் திருத்தந்தையைச் சந்திப்பது குறித்து...

ஜூலை 4, இவ்வியாழனன்று இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்கள் திருத்தந்தையைச் சந்திக்க வருவது குறித்து கேள்வி எழுந்தபோது, புடின் அவர்கள், தான் மத நம்பிக்கையுள்ளவர் என்பதை கூறிவருவதால், அந்த அடிப்படையில், திருத்தந்தைக்கும் அரசுத்தலைவருக்கும் இடையே பரிமாற்றங்கள் நிகழும் என்றும், மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் குறித்த கவலைகள் வெளியிடப்படும் என்றும் தான் நம்புவதாக, கர்தினால் பரோலின் அவர்கள் இப்பேட்டியில் கூறினார்.

மேலும், இஸ்ரேல் பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே நிலவவேண்டிய உறவு, இஸ்லாமியரோடு திருப்பீடம் வளர்த்து வரும் உறவு, ஏனைய கிறிஸ்தவ சபைகளுடன் ஒன்றிப்பு பாதையில் நடைபோடும் திருப்பீடம் ஆகிய கருத்துக்களில் கர்தினால் பரோலின் அவர்கள் "Avvenire" செய்தித்தாளின் இயக்குனர் Marco Tarquinio அவர்களுடன் உரையாடினார்.

அத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதுவரை மேற்கொண்டுள்ள திருத்தூதுப் பயணங்கள், ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் குடிபெயர்ந்தோர் பிரச்சனை, அமேசான் காடுகளை மையப்படுத்தி, அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர்கள் மாமன்றம், மற்றும் வெனிசுவேலா நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழல் ஆகிய கருத்துக்களும் இந்த உரையாடலில் இடம்பெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2019, 15:01