அருளாளர் Maria Guadalupe Ortiz அருளாளர் Maria Guadalupe Ortiz 

அருளாளர் Ortiz, எளிமையான புனித வாழ்வுக்கு எடுத்துக்காட்டு

பொதுநிலை விசுவாசியாகிய அருளாளர் Maria Guadalupe Ortiz அவர்கள், 1916ம் ஆண்டு மத்ரிதில் பிறந்தார். 1944ம் ஆண்டில் புனித Escrivà அவர்களைச் சந்தித்தபின், மெக்சிகோ நாட்டிற்கு மறைப்பணியாற்றச் சென்றார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ வாழ்வில் தூய ஆவியாரின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி,  இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“கிறிஸ்தவ வாழ்வை இயக்குகின்ற தூய ஆவியார், நம்முடன் இருக்கின்றார், வாழ்வில் நம்முடன் பயணிக்கின்றார் மற்றும், நம்மை அவர் மாற்றுகின்றார். அவர், நம்முடன் இருந்து வெற்றியை நல்குகிறார்” என்ற சொற்கள், மே 18, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

அருளாளர் Ortiz

மேலும், மே 18, இச்சனிக்கிழமை காலையில், இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகர், Vistalegre அரண்மனை ஆலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இறைஊழியர் Maria Guadalupe Ortiz de Landazuri அவர்களை, அருளாளர் என அறிவித்தார், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பேராயத் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ பெச்சு.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, இத்திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால் பெச்சு அவர்கள், செபம் மற்றும் செயலையும், தியானம் மற்றும் பணியையும் ஒன்றிணைந்து ஆற்ற இயலும் என்று, இன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள Maria Guadalupe Ortiz அவர்கள், நம் எல்லாருக்கும் எடுத்துரைக்கிறார் என்று, மறையுரையாற்றினார்.

மாணவிகளை உருவாக்குதல் மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அருளாளர் Maria Guadalupe Ortiz அவர்கள், எல்லாச் சூழல்களிலும், மற்றவருக்கு ஒரு கொடையாக நாம் வாழ இயலும் என்பதை, தன் வாழ்வில் வெளிப்படுத்தினார் என்று கூறினார், கர்தினால் பெச்சு.

வேதியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய, பொதுநிலை விசுவாசி அருளாளர் Maria Guadalupe Ortiz அவர்கள், 1944ம் ஆண்டில் புனித Josemaría Escrivà அவர்களைச் சந்தித்தபின், விசுவாசத்தில் ஆழமாக வேரூன்றப்பட்டு, மெக்சிகோ நாட்டிற்கு மறைப்பணியாற்றச் சென்றார். 1916ம் ஆண்டு மத்ரிதில் பிறந்த இவர், 1975ம் ஆண்டில் Pamplonaவில் இறைபதம் சேர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2019, 15:34