சீனாவின் Guangzhouவில் உள்ள இயேசுவின் திரு இருதயப் பேராலயம் சீனாவின் Guangzhouவில் உள்ள இயேசுவின் திரு இருதயப் பேராலயம் 

'சீனமயமாதல்' என்ற கருத்தை புரிந்துகொண்டு செயல்பட...

சீன அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே இன்னும் பிரச்சனைகள் உள்ளன; அவற்றைத் தீர்க்க மனப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன - திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சீன அரசும், திருப்பீடமும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தவும், பிரச்சனைகளையும், கேள்விகளையும் சந்திக்கவும் தொடர்ந்து முயன்றுவருகின்றன என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஆங்கிலத்தில் வெளியாகும் ஒரு சீன நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“People’s Daily” என்ற நிறுவனத்தின் “Global Times” என்ற செய்தித் தாளுக்கு கர்தினால் பரோலின் அவர்கள் அளித்த பேட்டியில், சீன அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே இன்னும் பிரச்சனைகள் உள்ளன என்பதையும், அவற்றைத் தீர்க்க, மனப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளபப்டுகின்றன என்பதையும் கூறினார்.

நற்செய்தியைப் பரப்பும் பணியில், ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் கலாச்சாரங்களை புரிந்து செயல்பட வேண்டியுள்ளது என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், 'கலாச்சாரமயமாதல்', நற்செய்தி அறிவிப்புப்பணியின் தவிர்க்கமுடியாத அங்கம் என்பதையும் எடுத்துரைத்தார்.

சீன நாட்டில் நடைபெறும் 'சீனமயமாதல்' என்ற கருத்தை சரியாகப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வழிமுறைகளைச் சிந்திப்பது, சீன அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே உள்ள உறவை இன்னும் வலிமையாக்கும் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் விளக்கிக் கூறினார்.

சீன நாட்டில் வாழும் கத்தோலிக்கர்கள், ஒற்றுமை, ஒப்புரவு மற்றும் நற்செய்தி அறிவிப்பு என்ற மூன்று வழிகளிலும் துணிவுடன், உறுதியுடன் நடைபயில, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பை, தன் பேட்டியின் இறுதியில் கர்தினால் பரோலின் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2019, 16:02