திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி 

திருத்தந்தையின் திருமடலைக் குறித்து தொர்னியெல்லி

உலகின் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும், 2020ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பாலியல் கொடுமையை விசாரிக்கும் அலுவலகங்கள் உருவாக்கப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையில் பாலியல் கொடுமைகளை ஒழிப்பதற்கு, ஒட்டுமொத்த திருஅவையும், தலத்திருஅவை அளவிலும், உலக அளவிலும் எடுக்கவேண்டிய முயற்சிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'Vos estis lux mundi' என்ற திருத்தூது மடல் வழியே கூறியுள்ளார் என்று, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள் தன் தலையங்கக் கட்டுரையில் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டில் மறைமாவட்ட அலுவலகங்கள்

உலகின் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும், 2020ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த கொடுமையை விசாரிக்கும் அலுவலகங்கள் உருவாக்கப்படும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடல் தெளிவுபடுத்தியுள்ளது என்பதை தொர்னியெல்லி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் துறவியர் மற்றும் குரு மாணவர்கள்

சிறுவர், சிறுமியருக்கு எதிரான கொடுமைகள் மட்டுமல்ல, மாறாக, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பாலியல் கொடுமைகளை, இளம் துறவியர் மற்றும் குரு மாணவர்கள் மீது மேற்கொள்வோரையும் குறித்து, இம்மடலில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்று தொர்னியெல்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகையக் குற்றங்கள் குறித்து, ஒவ்வொரு நாட்டிலும் நிலவி வரும் விதிமுறைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை, இம்மடல் எவ்வகையிலும் மாற்ற விழையவில்லை என்பதையும் தொர்னியெல்லி அவர்கள் தெளிவாக்கியுள்ளார்.

தலத்திருஅவைக்கு கூடுதல் பொறுப்பு

இந்தக் கொடுமையைத் தீர்க்கும் நோக்கத்துடன், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தலத்திருஅவைக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியுள்ளதன் வழியே, இந்தப் பழியை திருஅவையிலிருந்து முழுவதும் நீக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் இம்மடலில் தெளிவாகிறது என்று தொர்னியெல்லி அவர்கள் தன் தலையங்கக் கட்டுரையில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2019, 15:30