கர்தினால் பெர்னாண்டோ பிலோனி கர்தினால் பெர்னாண்டோ பிலோனி  

தாய்லாந்தில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு புதிய உந்துசக்தி

கர்தினால் பிலோனி அவர்கள், மே 17, இவ்வெள்ளியன்று, தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரின் அன்னை மரியாவின் விண்ணேற்பு பேராலயத்தில், ஆயர்களைச் சந்தித்து, அவர்கள் ஆற்றிவரும் நற்செய்திப் பணியை ஊக்குவித்தார்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தாய்லாந்து நாட்டில் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டதன் 350ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, அந்நாட்டில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு புதிய உந்துசக்தி தேவை என்பதை, அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், இவ்வெள்ளியன்று கூறினார்.

தாய்லாந்தில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கென அந்நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், அந்நாட்டு ஆயர்களிடம், மே 17, இவ்வெள்ளியன்று இவ்வாறு கூறினார்.

மே 16 இவ்வியாழனன்று தாய்லாந்தில் மேய்ப்புப்பணி பயணத்தைத் துவக்கியுள்ள கர்தினால் பிலோனி அவர்கள், தாய்லாந்து மக்களுக்கு, முதன் முதலில் மீட்பின் நற்செய்தியைக் கொண்டுவந்த மறைப்பணியாளர்களின் முயற்சிகள் தொடர்ந்து ஆற்றப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  

தாய்லாந்து மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஆசிரையும் தெரிவித்த கர்தினால் பிலோனி அவர்கள், ஓர் ஆயர், திருத்தூதர்களின் வழிவருபவராக, நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருதையும் நினைவுபடுத்தினார்.

மே 18, இச்சனிக்கிழமை பாங்காக் அருகே உள்ள சம்பிரானில், 350வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் திருப்பலியை, கர்தினால் பிலோனி அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

தாய்லாந்து நாட்டின் சியாம் (Siam) என்ற பகுதியில் 1669ம் ஆண்டு துவக்கப்பட்ட முயற்சிகள் வழியே, அந்நாட்டில் கிறிஸ்தவம் அறிமுகமாகி, 350 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனைக் கொண்டாட அந்நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் பிலோனி அவர்கள், மே 21, வருகிற செவ்வாயன்று அதனை நிறைவு செய்வார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2019, 15:38