தியான இல்லத்தில்........... தியான இல்லத்தில்........... 

தவக்காலத் தியான உரை - இறைவன் மீது விருப்பம்

இறைவனைக் காணவும், இறைவனை அன்புகூரவும் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் புதைந்திருக்கும் விருப்பங்களுக்கு, நம்பத்தகுந்த சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 13, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப்பணியின் ஆறாவது ஆண்டை நிறைவு செய்துள்ள வேளையில், அவர் பங்கேற்றுவரும் தவக்காலத் தியானத்தை வழிநடத்தும் அருள்பணி பெர்னார்தோ ஜியான்னி அவர்கள், இப்புதன் காலையில் வழங்கிய தியான உரையில், திருத்தந்தை பிரான்சிஸ் என்ற கொடையை, திருஅவைக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறினார்.

எல்லைகளை வகுத்துவரும் இன்றைய உலகில், ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தங்கள் எல்லைகளைக் கடந்து, மற்றவர்களைச் சந்திக்க முன்வரவேண்டும் என்பதையும், நாம் ஒவ்வொருவரும் உள்ளங்களில் உருவாக்கிவரும் வேலிகளை தகர்க்கவேண்டும் என்பதையும் சொல்லித்தரும் திருத்தந்தைக்கு, அருள்பணி ஜியான்னி அவர்கள் நன்றி கூறினார்.

மார்ச் 13, இப்புதன் காலையில் அருள்பணி ஜியான்னி அவர்கள் வழங்கிய ஐந்தாவது தியான உரையில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் பற்றியெரியும் விருப்பங்களைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறைவன் மீது விருப்பம் கொள்ளவேண்டும் என்று புனித பெனடிக்ட் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்துக் கூறிய, புனித பெனடிக்ட் துறவு சபையின் அருள்பணியாளர் ஜியான்னி அவர்கள், இறைவன் மீது விருப்பம் கொண்டு, அவரைத் தேடும் வேளையில், நம்மை நாமே கண்டடைகிறோம் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

இறைவனைக் காணவும், இறைவனை அன்புகூரவும் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் புதைந்திருக்கும் விருப்பங்களுக்கு, நம்பத்தகுந்த சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை, அருள்பணி ஜியான்னி அவர்கள் தன் தியான உரையில் வலியுறுத்திக் கூறினார்.

உண்மையான விருப்பங்களை வளர்க்கும் திறமை, இன்றைய உலகில் காணாமல் போகிறது என்பதை ஓர் எச்சரிக்கையாகக் கூறிய அருள்பணி ஜியான்னி அவர்கள், இளையோரின் கண்ணோட்டங்களை இன்னும் விரிவாக்கி, அவர்கள் உண்மையையும், உன்னதத்தையும் விரும்பும்படி தூண்டுவது நம் கடமை என்பதை எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2019, 15:07