திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி 

ஆப்ரிக்க ஒலிபரப்பு ஒன்றியத்திற்கு ருஃபீனியின் செய்தி

தகவல் துறையில் வியக்கத்தக்க புரட்சிகள் நிகழ்ந்தாலும், அவை, தொழில் மயமாக்கப்படும் வேளையில், அதற்கு ஈடுகொடுக்க இயலாமல், ஆப்ரிக்காவின் பல நாடுகள் பின்னோக்கிச் தள்ளப்படுவது அநீதி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிஜிட்டல் தொடர்பு உலகில், புரட்சிகரமான மாற்றங்கள் உருவாகியிருந்தாலும், அந்த மாற்றங்களை, தங்கள் சொந்த மண்ணில் வேரூன்றச் செய்வது ஒரு பெரும் சவாலாக உள்ளது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஆப்ரிக்காவில் நடைபெறும் ஒரு பன்னாட்டு கூட்டத்திற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

ஆப்ரிக்க ஒலிபரப்பு ஒன்றியம், மொராக்கோ நாட்டின் Marrakech நகரில், மார்ச் 27, இப்புதனன்று, நடத்திய 12வது பொது அமர்வுக்கு, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி அவர்கள் அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

"புதிய ஊடகங்களும், ஆப்ரிக்காவின் ஒளி-ஒலி தொழிலில் அவற்றின் தாக்கங்களும்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் பொது அமர்வு, ஆப்ரிக்க கண்டம் சந்திக்கும் பல சவால்களை எதிர்கொள்ள அழைப்பு விடுக்கிறது என்று ருஃபீனி அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் துறையில் வியக்கத்தக்க புரட்சிகள் நிகழ்ந்தபோதிலும், அவை, தொழில் மயமாக்கப்படும் வேளையில், அதற்கு ஈடுகொடுக்க இயலாமல், ஆப்ரிக்காவின் பல நாடுகள் பின்னோக்கிச் தள்ளப்படுவது, அநீதமான ஒரு சூழலை உருவாக்குகிறது என்று, ருஃபீனி அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பன்னாட்டளவில் ஊடக ஆதிக்கத்தைக் கொண்டுள்ள பெரும் நிறுவனங்கள், ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய உள்நாட்டு கலாச்சார மற்றும் தொழில் முயற்சிகளை விழுங்கிவிட்டு, தங்கள் கருத்தியல்களைப் புகுத்துவதால், ஒரே மாதிரியான சிந்தனைகள் உருவாகின்றன என்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட கவலையை ருஃபீனி அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மனித மாண்பையும், மண்ணின் கலாச்சாரங்களுக்கு உரிய மதிப்பையும், வழங்கும் ஊடக முறையில், கருத்துப் பரிமாற்றங்களும், உரையாடலும் வளர்க்கப்படும் என்று திருத்தந்தை கூறிய கருத்தையும், ருஃபீனி அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2019, 16:00