கர்தினால் Ruben Salazar Gomez கர்தினால் Ruben Salazar Gomez 

ஆயர்களின் பொறுப்புணர்வு தவிர்க்க இயலாதது

"இக்கட்டான தருணத்தில் திருஅவை - மோதல்களைச் சந்தித்து, உறுதியுடன் செயலாற்றுவது" என்ற தலைப்பில் கொலம்பிய நாட்டு கர்தினால் Salazar அவர்கள் உரையாற்றினார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருஅவையில், ஆழமாகப் புரையோடியுள்ள, குருத்துவத்தை முதன்மைப்படுத்தி  நடத்தப்படும் அருள்பணியாளர்களின் நடவடிக்கைகளை, வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் ஆயர்கள் பெறுப்புடன் செயல்பட வேண்டியது இன்றியமையாதது என்று, இலத்தீன் அமெரிக்க கர்தினால் Rubén Salazar Gómez அவர்கள் கூறினார்

வத்திக்கானில் "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் முக்கிய கூட்டத்தில், பிப்ரவரி 21, இவ்வியாழன் மாலையில் உரையாற்றிய, இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் அவையின் தலைவரான, பொகோட்டா பேராயர், கர்தினால் Salazar அவர்கள், இவ்வாறு கூறினார்.

"இக்கட்டான தருணத்தில் திருஅவை - மோதல்களைச் சந்தித்து, உறுதியுடன் செயலாற்றுவது" என்ற தலைப்பில் உரையாற்றிய, கொலம்பிய நாட்டு கர்தினால் Salazar அவர்கள், அருள்பணியாளர்கள், தங்களின் குருத்துவத்தை முன்னிலைப்படுத்தி, செயல்படும்போது இடம்பெறும் கடுமையான தவறுகள், பிரச்சனைகளின் கொடூரத்தை அதிகரிக்கின்றது என்பதை ஆயர்கள் ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் நடைபெற்ற அமர்வில் இவ்வாறு உரையாற்றிய கர்தினால் Salazar அவர்கள், திருஅவையில் இடம்பெறும் நெருக்கடிநிலை பற்றியும், ஆயர்களின் கடமையுணர்வும் பற்றியும் தன் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.  

சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகள்

சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகள், பிற நிறுவனங்களிலும் குழுக்கள் மத்தியிலும் இடம்பெறுவதை, திருஅவையில் இடம்பெறும் முறைகேடுகளோடு ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று கூறிய கர்தினால் Salazar அவர்கள், திருஅவையில் சிறியோர்க்கெதிராக இடம்பெறும் பாலியல் முறைகேடுகள், திருஅவை சமுதாயத்தின் உண்மையான உள்ளியல்புக்கே முரணானவை என்றும், ஆன்மாக்களின் நலனைத் தேடும் இயல்பைக் கொண்டுள்ள குருத்துவத் திருப்பணியின் மகத்துவத்தை மிகப்பெரிய அளவில் சிதைக்கின்றது என்றும் கூறினார்.

தங்களின் சொல்லும் செயலும் ஒத்திணங்கிச்செல்லும் வகையில், கடமையுணர்வுடன் செயல்படுமாறு உலக ஆயர்களை வலியுறுத்திய கர்தினால் Salazar அவர்கள், திருஅவையில் இடம்பெறும் எந்தவித முறைகேடுகளையும் நியாயப்படுத்தாமல், துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் கேட்கப்பட்டு, தெளிவான செயல்களால் நீதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஆயர்களின் பொறுப்புணர்வு பல துறைகளைச் சார்ந்தது மற்றும் ஆயர்களின் கடமையுணர்வு, எப்போதும் தப்பித்துச் செல்ல முடியாதது என்றும் கூறினார், கொலம்பிய கர்தினால் Rubén Salazar Gómez.

கர்தினால் அவர்களின் உரையைத் தொடர்ந்து, கேள்வி அமர்வு இடம்பெற்றது. பின்னர் இக்கூட்டத்தில் கலந்துகொள்வோர், 11 குழுக்களாகப் பிரிந்து விவாதித்து, தங்களின் குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். சாட்சியங்களுடன்கூடிய மாலை செப வழிபாட்டுடன் வியாழன் மாலை அமர்வு முடிவுக்கு வந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2019, 15:30