அமிர்தசரசில் சீக்கியர்கள் அமிர்தசரசில் சீக்கியர்கள் 

கனிவு கலாச்சாரத்தை ஊக்குவிக்க திருப்பீடம் வலியுறுத்தல்

குரு நானக் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, உலகின் அனைத்து சீக்கிய மதத்தவர்க்கு வாழ்த்து செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவர்களும், சீக்கியர்களும் கனிவு கலாச்சாரத்தை ஒன்றிணைந்து ஊக்குவிக்க வேண்டுமென்று, திருப்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் அவர்கள் பிறந்த நாள் நவம்பர் 23, வருகிற வெள்ளியன்று சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, உலகின் அனைத்து சீக்கிய மதத்தவர்க்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, உலகில் அனைவரின் நல்வாழ்வுக்காக, கிறிஸ்தவர்களும், சீக்கியர்களும் கனிவன்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுமாறு கூறியுள்ளது.

ஒருவர் ஒருவரை புறக்கணிக்கின்ற மற்றும், தன்னலம் மிகுந்த கலாச்சாரம், ஏறத்தாழ எல்லா இடங்களிலும் வேரூன்றுவதாகத் தெரிகின்ற இக்காலத்தில், கனிவு கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று, அச்செய்தி கூறுகின்றது.

குடும்பங்கள், சமயப் போதனைகள், கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவை,  சிறார், மாணவர்கள், மற்றும் ஏனையோரில் கனிவு கலாச்சாரத்தைப் பேணி வளர்க்க இயலும் என்றும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செய்தி கூறுகின்றது.  

தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 1469ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்த குரு நானக் அவர்கள், 1539ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி காலமானார். இவரின் பிறந்த நாள், அக்டோபர்-நவம்பர் மாதங்களுக்கு இடையில் வரும் பௌணர்மி நாளன்று சிறப்பிக்கப்படுகின்றது. இவர் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு ஒரே கடவுள் கொள்கையைப் போதித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2018, 15:14