திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் O’Malley திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் O’Malley  

பிப்ரவரி கூட்டம் முக்கியமான தருணம் - கர்தினால் O’Malley

திருஅவையில் சிறார் பாதுகாப்பு குறித்து நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கென, தயாரிப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதற்கு திருத்தந்தைக்கு நன்றி - கர்தினால் O’Malley

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் சிறார் பாதுகாப்பு குறித்து, வருகிற பிப்ரவரியில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கென, தயாரிப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளார், சிறார் பாதுகாப்புக்கான திருப்பீட குழுவின் தலைவர், கர்தினால் Sean O’Malley.

2019ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி முதல், 24ம் தேதி முடிய, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் திருஅவையில் சிறார் பாதுகாப்பு குறித்த கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தயாரிப்பு குழு ஒன்றை, இவ்வெள்ளியன்று உருவாக்கினார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட, கர்தினால் Sean O’Malley அவர்கள், இந்நடவடிக்கைக்கு திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், திருஅவையில் சிறார் பாதுகாப்பு  குறித்த கூட்டத்திற்கு, சிறார் பாதுகாப்புக்கான திருப்பீட குழு பரிந்துரைத்தது என்றும், பின்னர் அப்பரிந்துரையை சி-9 கர்தினால்கள் அவை பரிசீலனை செய்தது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார்.

சில அருள்பணியாளர்களால் பாலியல்முறையில் பாதிக்கப்பட்டுள்ள சிறார் மற்றும் வயதுவந்தோர்க்கு, மறுவாழ்வு அளித்தல், கல்வி வழங்குதல் மற்றும் அத்தகைய குற்றங்களைத் தடுத்தல் ஆகியவற்றை, உலகளாவிய திருஅவையில் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு, சிறார் பாதுகாப்புக்கான திருப்பீட குழு பரிந்துரைகளை வழங்கி வருகின்றது என்றும், கர்தினால் O’Malley அவர்களின் அறிக்கை கூறுகின்றது.

பாலியல்முறையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும், புதிதாக நியமனம் பெற்ற ஆயர்களையும், சிறார் பாதுகாப்புக்கான திருப்பீட குழு, அடிக்கடி நேரடியாகச் சந்தித்து வருகின்றது எனவும், கர்தினால் O’Malley அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியமித்துள்ள தயாரிப்பு குழுவில், மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்களும் ஒருவராவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2018, 15:50