ஐ.நா. தலைமையகத்தில் பேராயர் பெர்னதித்தோ அவுசா ஐ.நா. தலைமையகத்தில் பேராயர் பெர்னதித்தோ அவுசா  

விண்வெளியை அமைதிப் பூங்காவாக காப்போம்

விண்வெளியை நாடுகள் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையும், நல்லிணக்கமும் தேவை - பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

விண்வெளியில் நடத்தப்படும் அனைத்து ஆய்வுகளும், மனித குல முன்னேற்றத்தை மையம் கொண்டதாகவும், மனித குலமனைத்திற்கும் பயன்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா.வில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் அழைப்பு விடுத்தார், பேராயர் பெர்னதித்தோ அவுசா.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் அவுசா அவர்கள், விண்வெளியில் ஆயுதப்போட்டியை தவிர்த்தல், விண்வெளியை அமைதி வழியில் பயன்படுத்துவதில் நாடுகளின் ஒத்துழைப்பு, என்ற தலைப்புகளில், அக்டோபர் 24 இப்புதனன்று வழங்கினார்.

விண்வெளியில் ஆயுதப் போட்டிகள், மற்றும் ஆயுத சோதனைகள் நடத்துவது குறித்து 1967ம் ஆண்டே நாடுகளுக்கிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பேராயர் அவுசா அவர்கள், நினைவுறுத்தினார்.

விண்வெளியின் எந்த ஓர் ஆய்வும் அனைத்து மனித குலத்திற்கும் பயன் தருவதாக, வெளிப்படைத்தன்மை உடையதாக இருக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த பேராயர் அவுசா அவர்கள், விண்வெளியில் செயற்கை கோள்களை நிறுத்தி, பூமியை கண்காணிக்கும் ஆபத்தான போக்கு வளர்ந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.

இராணுவப் பாதுகாப்பு தொடர்புடையவைகளுக்கு வான்வெளியைப் பயன்படுத்தும் நாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்போது, நாடுகளுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கவும், செயற்கை கோள்கள் ஒன்றுக்கொன்று மோதாமல் செயல்படவும் உதவுவதாக இருக்கும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் பேராயர் அவுசா.

விண்வெளியை அமைதி வழிகளில் பயன்படுத்த நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு உருவாக்கப்பட வேண்டும் என்ற அழைப்பும், பேராயர் அவுசா அவர்களால் முன்வைக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2018, 14:35