ஜெனீவா ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பாக பங்கேற்கும் பேராயர் ஈவான் யுர்க்கோவிச் ஜெனீவா ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பாக பங்கேற்கும் பேராயர் ஈவான் யுர்க்கோவிச் 

புலம்பெயர்ந்தோரில், பாதிக்கும் மேற்பட்டோரின் சராசரி வயது 18.2

பெற்றோரை இழந்து, யாருடைய துணையுமின்றி புலம்பெயர்ந்துள்ள குழந்தைகள், மனித வர்த்தகத்திற்கு எளிதான இலக்காக மாறும் ஆபத்து உள்ளது - பேராயர் யுர்க்கோவிச்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2017ம் ஆண்டு, உலகெங்கும் 6 கோடியே, 85 இலட்சம் பேர் தங்கள் உறைவிடங்களைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், இவர்களில், 2 கோடியே 54 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தோராய் வாழ்கின்றனர் என்றும், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையின் பன்னாட்டு கருத்தரங்கில், தன் வேதனையை வெளியிட்டார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பாக பங்கேற்கும் பேராயர் ஈவான் யுர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. அவையின் புலம்பெயர்ந்தோர் பிரிவு, அக்டோபர் 3, இப்புதனன்று ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த 69வது அமர்வில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில், தன் ஆழ்ந்த வருத்தங்களையும் செபங்களையும் தெரிவிப்பதாக, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில், கூறினார்.

உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோரில், பாதிக்கும் மேற்பட்டோரின் சராசரி வயது 18.2 என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், இவ்விளையோருக்கும், சிறாருக்கும் தகுந்த கல்வி வழங்குவது, அனைத்து அரசுகளும் மேற்கொள்ளவேண்டிய முக்கிய கடமை என்று வலியுறுத்தினார்.

அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது ஒரு முக்கியமான கடமை என்று கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், குறிப்பாக, பெற்றோரை இழந்து, யாருடைய துணையுமின்றி புலம்பெயர்ந்துள்ள குழந்தைகள், மனித வர்த்தகத்திற்கு எளிதான இலக்காக மாறும் ஆபத்து உள்ளது என்பதால், அவர்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

மக்கள், குறிப்பாக, வறியோர் புலம்பெயர்ந்து செல்லவேண்டியதற்கு ஒரு முக்கிய காரணம், இயற்கை சீரழிவும், அதன் விளைவாக உருவாகும் இயற்கைப் பேரிடர்களும் என்று சுட்டிக்காட்டிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், புலம்பெயர்தல் என்ற பிரச்சனையும் பிணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2018, 15:56