நிக்கராகுவாவில் அமைதியை ஆதரித்து பேரணி நிக்கராகுவாவில் அமைதியை ஆதரித்து பேரணி 

அமைதியின் கலாச்சாரத்தை வளர்க்க விழையும் திருப்பீடம்

அன்னை தெரேசா அவர்கள், ஐ.நா. அவையில் உரையாற்றச் சென்றிருந்தபோது, "இவரே, ஐக்கிய நாடுகள் அவை. இவரே, உலகின் அமைதி" என்று ஐ.நா. பொதுச்செயலர் Javier Pérez de Cuéllar அவர்கள், அவரை அறிமுகம் செய்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமைதியின் கலாச்சாரத்தை உலகில் வளர்ப்பதற்கு, திருப்பீடம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது என்று, ஐ.நா.அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாக பங்கேற்றுவரும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. தலைமையகத்தில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

நியூ யார்க் நகர், ஐ.நா. தலைமையகத்தில், செப்டம்பர் 5 இப்புதனன்று நடைபெற்ற அமைதியின் கலாச்சாரம் பற்றிய உயர் மட்ட கலந்துரையாடலில், பேராயர் அவுசா அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

நாடுகளுக்குள் செயல்படும் பல்வேறு குழுக்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும், நிகழ்ந்துவரும் எண்ணற்ற மோதல்களை, 'துண்டு, துண்டாக நிகழும் மூன்றாம் உலகப்போர்' என்று திருத்தந்தை கூறியதை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

ஒருவர் ஒருவர் மீது கொண்டுள்ள உண்மையான மதிப்பு, உரையாடல் ஆகிய பண்புகள் கொண்ட சந்திக்கும் கலாச்சாரம், அமைதியின் கலாச்சாரத்தை உருவாக்க பெரிதும் துணைபுரியும் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் மதிக்கப்படுவதன் வழியே, அமைதியின் கலாச்சாரத்தை உருவாக்க முடியும் என்பதை, அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட உருவாக்கப்பட்ட ஐ.நா.அவை, இவ்வுலகிற்கு சொல்லித்தரவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 5ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவை, புனித அன்னை தெரேசாவின் திருநாளைக் கொண்டாடுகிறது என்பதை, சிறப்பாகக் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், 1979ம் ஆண்டு, நொபெல் அமைதி விருதைப் பெற்ற அன்னை, 1985ம் ஆண்டு ஐ.நா. அவையில் உரையாற்ற வந்திருந்தபோது, அன்றைய ஐ.நா. பொதுச்செயலர் Javier Pérez de Cuéllar அவர்கள், அன்னையை அறிமுகப்படுத்திய வேளையில், "இவரே, ஐக்கிய நாடுகள் அவை. இவரே, உலகின் அமைதி" என்று கூறியதை, தன் உரையின் இறுதியில் கூறி முடித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2018, 15:10