ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
மனிதர்களுக்குப் பணியாற்றும் வகையிலும், மனித குடும்பத்தை ஒருங்கிணைக்கும் முறையிலும் வர்த்தகங்கள் நடைபெறவேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் குடும்பங்களின் உலக மாநாட்டில் உரையாற்றினார்.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் துவங்கியுள்ள குடும்பங்களின் உலக மாநாட்டின் ஒரு நிகழ்வாக, ஆகஸ்ட் 22, இப்புதனன்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
படைப்பின் சிகரமாக உருவாக்கப்பட்ட ஆணும், பெண்ணும், கடவுளின் படைப்பை இவ்வுலகில் தொடர்ந்து உருவாக்கும் பணியில் இணைந்துள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'அன்பின் மகிழ்வு' (Amoris Laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடலில் கூறியுள்ளதை, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே, திருப்பீடத்தின் புலம்பெயர்ந்தோர் பணியை ஒருங்கிணைக்கும் செயலராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள இயேசு சபை அருள்பணியாளர், மைக்கிள் செர்னி (Michael Czerny) அவர்கள், குடும்பங்களின் உலக மாநாடு ஏற்பாடு செய்திருந்த ஓர் அமர்வில், புலம்பெயர்ந்தோரைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு, கிறிஸ்தவர்கள், குறிப்பாக, கிறிஸ்தவ குடும்பத்தினர் அளிக்கவேண்டிய சிறப்பான பதிலிறுப்பைக் குறித்து, அருள்பணி செர்னி அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.