நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி 

அமெரிக்க மறைபரப்புப்பணி மாநாடு குறித்து கர்தினால் பிலோனி

மறைபரப்புப் பணியில் முதலிடம் பெறுவது, குடும்பங்கள் என்பது 5வது அமெரிக்க மறைபரப்புப்பணி மாநாட்டில் சிறப்பாக உணரப்பட்டது - கர்தினால் பெர்னாண்டோ பிலோனி

லூயிஸ் ஜெரோம் – வத்திக்கான் செய்திகள்

'உங்கள் கதவுகளைத் திறந்து, வரவேற்பு தாருங்கள்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களை பொலிவியா மக்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர் என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் கூறினார்.

ஜூலை 10ம் தேதி முதல், 14ம் தேதி முடிய பொலிவியா நாட்டின் சாந்தா க்ரூஸ் தெ லா சியேரா (Santa Cruz de la Sierra) நகரில் நடைபெற்ற 5வது அமெரிக்க மறைபரப்புப்பணி மாநாட்டில் கலந்துகொண்ட கர்தினால் பிலோனி அவர்கள், தென் அமெரிக்க மக்களிடையே விளங்கும் விருந்தோம்பல் பண்பைக் குறித்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அமெரிக்க கண்டம் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது, இந்த மாநாட்டில் உணரப்பட்ட அடிப்படை உண்மை என்று கூறிய கர்தினால் பிலோனி அவர்கள், மறைபரப்புப் பணியில் முதலிடம் பெறுவது, குடும்பங்கள் என்பதும் சிறப்பாக உணரப்பட்டது என்று கூறினார்.

சமுதாயம் சந்தித்துவரும் பல்வேறு அநீதிகள் குறித்த விவாதங்களில், புலம் பெயர்தல் என்ற அநீதி முக்கியமான இடம்பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பிலோனி அவர்கள், இந்த அநீதிகளைக் களைய, திருஅவை ஆற்றவேண்டிய 11 பரிந்துரைகள், இந்த மாநாட்டின் இறுதி ஏட்டில் இடம்பெற்றுள்ளன என்று கூறினார்.

தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை கருவூலமான அமேசான் காடுகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆழமான விவாதங்கள் இடம்பெற்றன என்பதை, கர்தினால் பிலோனி அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

நிறைவுற்ற 5வது அமெரிக்க மறைபரப்புப்பணி மாநாடு, இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கும், அமேசான் பகுதியை மையப்படுத்தி, வருகிற ஆண்டு வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றத்திற்கும் தகுந்ததொரு தயாரிப்பாக அமைந்தது என்று கர்தினால் பிலோனி அவர்கள் தன் பேட்டியின் இறுதியில் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2018, 14:38