போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் திருத்தந்தை செபம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பல மாதங்களாக நிகழும் அரசியல் கொந்தளிப்பு, பரவலான குற்றச்செயல்கள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு சரிவு ஆகியவற்றைத் தொடர்ந்து ஹெய்ட்டியில் நாட்டில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 28, இஞ்ஞாயிறன்று, வெனிஸ் நகரின் புனித மாற்கு சதுக்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலிச் செபத்தை உரைப்பதற்கு முன்பு இவ்வாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை, நல வாழ்வு அமைப்பின் சரிவு, உணவுப் பற்றாக்குறை மற்றும் மக்களை இடம்பெயர்ந்துச் செல்லத் தூண்டும் வன்முறை காரணமாக ஹெய்ட்டி நாட்டு மக்கள் நம்பிக்கையற்று வாழ்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த வாரம்தான் கரீபியன் தீவு நாட்டில் ஒரு இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அதன் பணியை இறைவனிடம் ஒப்படைத்து அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவைக் கோரினார் திருத்தந்தை.
அவ்வாறே, கடந்த வியாழனன்று, Port au Prince இல் பதவியேற்ற புதிய இடைக்கால அரசுத் தலைவரின் பணிகளை நாம் இறைவனிடம் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வோம் என்றும், இதனால் அனைத்துலகச் சமூகத்தின் புதுப்பிக்கப்பட்ட ஆதரவுடன், அந்நாடு அமைதி மற்றும் நிலைத்தன்மையை அடைய வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை.
உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரேல், மியான்மர்
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரேல், மியான்மார் மற்றும் வன்முறையால் துயற்றுவரும் மக்கள் பலரையும் தான் நினைவுகூர்வதாக உரைத்த திருத்தந்தை, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்திற்கான விருப்பம் அனைவரிடமும் வளர அமைதியின் கடவுள் இதயங்களை ஒளிரச் செய்வாராக! என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்