பல விடயங்களை சிலுவை நமக்கு நினைவூட்டி நிற்கின்றது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சிலுவை அடையாளம் என்பது, கடவுள் நம்மை அன்புகூர்வதை நமக்கு உணர்த்துவதாகவும், அவரின் தொடர்ந்த அரவணைப்பை நாம் உணர்வதற்கு உதவுவதாகவும் உள்ளது என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மூவொரு கடவுள் திருவிழாவையொட்டி ஜூன் 4ஆம் தேதி உரோம் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செபவுரை வழங்கியபோது, ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் வாழ்வில் கடவுளை அன்பாகக் காண்கிறார்களா என்ற கேள்வியை தனக்குள்ளேயே கேட்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
பல ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் புனித பேருது வளாகத்தில் குழுமியிருக்க, அவர்களுக்கு மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் சிறுவயதில் கற்றுக்கொண்ட சிலுவை என்னும் அடையாளம் கடவுளின் அரவணைப்பை நமக்கு உணரவைப்பதோடு, கடவுளின் அன்பு மற்றும் கனிவால் நம்மை நிறைக்கிறது என எடுத்துரைத்தார்.
இறைத்தந்தையாம் கடவுளின் மறையுண்மைகள் குறித்து பேரார்வம் கொண்டிருந்த நிக்கதேமுவுக்கும் இயேசுவுக்கும் நடந்த உரையாடல் குறித்து விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் மனிதகுலத்தை அதிகம் அதிகமாக அன்பு கூர்ந்ததாலேயே தன் ஒரே மகனையே இவ்வுலகிற்கு அனுப்பினார் என இயேசு நிக்கதேமுவிடம் கூறியதை மீண்டும் நினைவூட்டினார்.
தன் இறைத்தந்தை குறித்தும் அவரின் அளவிடமுடியாத அன்பு குறித்தும் இயேசு எடுத்துரைத்தார் என்ற திருத்தந்தை, தந்தை மகன் என்பது குறித்து நாம் சிந்திக்கும்போது, இணைந்து உண்ண மேசையைச் சுற்றி அமர்ந்து வாழ்வைப் பகிரும் குடும்பத்திலிருந்து இந்த உறவை புரிந்துகொள்ளலாம் என்றார்.
மூவொரு கடவுள் என்பது, தந்தை, மகன், துய ஆவியார் என்ற ஒன்றிப்பின் கடவுள் குறித்து எடுத்துரைக்கின்றது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒன்றிப்பின் இறைவனாக மூவொரு கடவுளை நோக்குவது வெறும் சாயல் மட்டுமல்ல, அது ஓர் உண்மை நிலையும்கூட, ஏனெனில் இயேசு வழியாக இறைவனால் நம் இதயங்களில் பொழியப்படும் தூய ஆவியார், நமக்குக் கனிவையும், இரக்கத்தையும் அருகாமையையும் வழங்கும் இறைப்பிரசன்னத்தை நாம் சுவைக்க வைக்கிறார் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நிக்கதேமுவுக்கு இயேசு செய்ததுபோல், நம் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்பதை நம் சிலுவை அடையாளத்தின் வழி நாம் கண்டுகொள்ளலாம் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதகுலம் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பால் இறைத்தந்தை தன் ஒரே மகனை இவ்வுலகில் சாவுக்கு கையளித்ததை சிலுவை நமக்கு நினைவூட்டி நிற்கின்றது என மேலும் எடுத்துரைத்தார்.
கடவுளின் அன்புக்கு நாமும், நம் சமுதாயமும் சான்றாக உள்ளோமா என்ற கேள்வியை கேட்போம் என விண்ணபித்த திருத்தந்தை, அன்பை வழங்குவது என்பது, இரக்கமுடன் செயல்படுவதையும், நம் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதையும், நம் சமுதாயத்தை அனைவரும் இணைந்து வாழும் இல்லமாக மாற்றுவதையும் உள்ளடக்கியது என்பதையும் நினைவூட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்