புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் தந்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
இத்தாலியின் கிழக்குப் பகுதியில் உள்ள எமிலியா ரோமாஞ்னா பகுதியில் ஏற்பட்ட கொடூரமான புயலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன் ஆறுதலையும் இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தன் இரங்கலையும் தெரிவித்து தந்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 18 வியாழன் அன்று, திருப்பீடச் செயலகத்தின், பொது விவகாரத் துறை தலைவரான பேராயர் Edgar Peña Parra அவர்கள் கையொப்பமிட்டு திருத்தந்தையின் பெயரால் பொலோஞ்னா பெருநகர உயர்மறைமாவட்ட பேராயரும் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் MATTEO MARIA ZUPPI அவர்களுக்கு இத்தந்தியானது அனுப்பப்பட்டுள்ளது.
பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன்னுடைய உடன்இருப்பையும் ஆழ்ந்த செப உணர்வையும் வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மறைமாவட்ட நிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்கு தன் நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மற்றும் காயம்பட்ட மக்களுக்கு தன் ஆறுதலையும் செபத்தையும் அத்தந்தியில் வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேரழிவில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதியடைய செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
40,000 நகராட்சிகள் வெள்ளத்தால் பாதிப்பு, 280 இடங்களில் நிலச்சரிவுகள், 400 சாலைகள் சேதம் போன்ற பாதிப்புக்களை இப்புயல் வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போலோஞ்னா, Forlì-Cesena, Ravenna போன்ற இடங்களில் வாழும் மக்களுள் சிலர் காணாமல் போயுள்ளனர் என்றும் மக்கள் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்பின்றி துன்புறுகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்