இயேசுவின் காயங்கள் வெறுப்பை வெல்லும் அன்பின் அடையாளங்கள்

இயேசுவின் திருஉடலே தாயாம் திருஅவை. அவ்வுடலில் தான் அவருடைய அன்பின் மிகப்பெரிய அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதை உணரவேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசுவின் உடலில் உள்ள காயங்கள், வெறுப்பை வெல்லும் அன்பின் அடையாளங்கள், பழிவாங்கலை ஒன்றுமில்லாமல் செய்யும் மன்னிப்பின் அறிகுறிகள், மரணத்தை வெல்லும் வாழ்வு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன் வாழும் சகோதர சகோதரிகளின் சந்தேகம் மற்றும் பயத்தின் தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும்போதும், ​​அவர்களுடன் உறுதியாக ஒன்றிணைந்திருக்கும் போதும் இயேசுவின் முகத்தை நாம் காணலாம் என்றும் எடுத்துரைத்தார்.

இறைஇரக்க ஞாயிறினைக் கொண்டாடும் இந்நாளின் நற்செய்தியில் உயிர்த்தெழுந்த இயேசு அவரது சீடர்கள், குறிப்பாக, நம்பிக்கையற்ற தோமாவிற்கு அளித்த காட்சி பற்றியும் விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையில், நம்பிக்கையற்றவராக ஐயம் கொண்டவராக இருந்தவர் தோமா மட்டுமல்ல. மாறாக அவர் நம் அனைவரையும் அடையாளப்படுத்துகிறார் என்றும் கூறினார்.

துணிவுள்ளம் கொண்டவர் திருத்தூதர் தோமா

தோமா பல ஆண்டுகளாக இயேசுவைப் பின்தொடர்ந்தவர், ஆபத்துக்களை எதிர்கொண்டவர், துன்பங்களைத் தாங்கியவர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு குற்றவாளியைப் போல சிலுவையில் அறையப்பட்டு இறந்த இயேசுவை யாரும் விடுவிக்கவில்லை உதவவில்லை மாறாக பயந்து ஓடினர் என்றும், இத்தகைய பெரும் ஏமாற்றத்தை அனுபவித்த பின்பு, நம்புவது என்பது எளிதானதல்ல என்றும் விளக்கினார்.

மற்ற சீடர்கள் மேல் அறைக்குள் மறைந்து ஒளிந்து கொண்டிருக்கையில், வெளியே சென்ற தோமா துணிவுள்ளவராகத் தன்னை அடையாளப்படுத்துகிறார் என்றும், யாரேனும் அவரை அடையாளம் கண்டு, புகாரளித்து, கைது செய்துவிடலாம் என்ற நிலையிலும் துணிவுடன் வெளியே சென்ற தோமா பயம் கொண்டிருந்த மற்றவர்களை விட உயிர்த்த இறைவனைச் சந்திக்கத் தகுதியானவர் என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைவரும் ஒன்றிணைந்து இருக்கும் இடத்திலேயே இயேசு தன்னை வெளிப்படுத்துகின்றார், ஒன்றாக இணைந்து செபிப்பதிலும் அப்பம் பிடுவதிலும் இயேசுவைக்  காணலாம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று தோமாவிற்கு கொடுக்கப்பட்ட அழைப்பு நமக்கும் பொருந்தும் என்றும், உயிர்த்த இயேசுவை கண்கவர் நிகழ்வில் மேலோட்டமாக தேடுவதை விடுத்து இயேசுவின் திருஉடலே தாயாம் திருஅவை, அவ்வுடலில்தான் அவருடைய அன்பின் மிகப்பெரிய அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதை உணரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இயேசுவின் அன்பின் பெயரால், காயங்களின் பெயரால், கடவுளின் இரக்கத்திலிருந்து ஒருவரையும் தவிர்க்காமல், எல்லாரையும் உடன்பிறந்த உறவுடன் வரவேற்று, வாழ்க்கையில் காயப்பட்டவர்களுக்கு நம் கைகளைத் திறக்க நாம் தயாராக உள்ளோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2023, 12:15