தனித்தனியாக அழைக்கப்பட்டாலும் பெரியகுழுவின் அங்கமாக இருக்கிறோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தூதர்களின் அனுபவம் எப்போதும் தனிப்பட்ட மற்றும் பொதுவான என்னும் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது என்றும் அவற்றைப் பிரிக்க முடியாது எப்போதும் ஒன்றிணைந்தே செல்லவேண்டும் என்றும் நாம் தனித்தனியாக அழைக்கப்பட்டாலும் ஒரு பெரிய குழுவின் அங்கமாக இருக்கின்றோம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 28 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இஸ்பெயினின் Barcellona உயர் மறைமாவட்டத்தை சார்ந்த இளையோர்க்கான மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அருள்பணியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் தனித்தனியாக அழைக்கப்படுகிறோம், ஆனால் எப்போதும் ஒரு பெரிய குழுவின் அங்கமாக இருக்கிறோம் எனவும், பேசுவதற்கு முன் யோசித்து கவனமுடன் பேசவும், ஒன்றிணைந்து நடக்கவும், குழுவின் முதலிடத்தில் மட்டுமல்ல நடுவிலும் இறுதியிலும் நம்மை பொருத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை அறிய வேண்டும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது வறுமை மற்றும் பலவீனத்திலிருந்து நம்மை அழைத்த இயேசுவின் அழைப்பிற்கு நாம் முழுமையான மனமாற்றத்துடன் பதிலளிக்க வேண்டும் எனவும், அதிகப்படியான வாழ்க்கை முன்னேற்றக் கொள்கைகள், இரட்டைத்தனமான வாழ்க்கை, உலக திருப்திக்கான தேடல் போன்றவற்றை விடுத்து, சிலுவையைத் தழுவுதல், திருஅவையின் செயல்பாடுகளை தியானித்தல், செபம், துறவு முதலியவற்றை அடையவேண்டும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை
இறைவனின் கருணையால் தொடப்படும் நாம் அந்த இரக்கத்தின் திறனால் கடவுளுடைய நெருக்கத்தின் அனுபவத்தைக் காண வேண்டும் எனவும், எல்லா சமூகச் சூழல்களிலும் உடன்பிறந்த உறவைத் தேடவும், அனைவரையும் வரவேற்கவும், இணைந்து பணியாற்றவும், ஒருமித்த தீர்வுகளைத் தேட கற்றுக்கொள்ளவும் கற்பிக்கவும் வேண்டும் என வலியுறுத்தினார் திருத்தந்தை
ஆரோக்கியமான, சுதந்திரமான மனப்பான்மையுடன் வாழ, நாம் சார்ந்திருக்கும் கிறிஸ்தவக் குழுவிலோ, அல்லது நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பிலோ அலட்சியத்துடன் ஒருபோதும் நிலைத்துவிடாதவாறு கவனமாக இருக்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்