2001ம் ஆண்டு, கிரேக்க நாட்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் 2001ம் ஆண்டு, கிரேக்க நாட்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் 

இரு திருத்தந்தையரின் அடிச்சுவடுகளில் திருத்தந்தையின் பயணம்

கத்தோலிக்கத் திருஅவை, 1204ம் ஆண்டு, கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையை விலக்கிவைத்ததால் உருவான காயங்களுக்கு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இந்த திருத்தூதுப் பயணத்தின்போது, மன்னிப்புகேட்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 2, இவ்வியாழன் முதல் 6, வருகிற திங்கள் முடிய சைப்பிரசு நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் மேற்கொண்டுள்ள திருத்தூதுப் பயணம், அவரது முன்னோடிகளான, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் மற்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோரின் அடிச்சுவடுகளில் அமைந்துள்ளது.

திருத்தூதரான பர்னபா பிறந்த சைப்பிரசு நாடு, பின்னர், அவரது பணித்தளமாகவும் அமைந்தது என்பதும், புறவினத்தாரின் திருத்தூதரான பவுல், கிரேக்க நாட்டின் பிலிப்பி நகரில் கிறிஸ்துவை பறைசாற்றியதையடுத்து, அந்நகரம், ஐரோப்பாவில், கிறிஸ்தவத்தின் விதைகளைப் பெற்ற முதல் நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

2001ம் ஆண்டு கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட யூபிலி ஆண்டின் ஒரு பகுதியாக, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், அவ்வாண்டு மே மாதம், திருத்தூதர் பவுலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, கிரேக்க நாட்டிற்கு திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார். திருத்தந்தை ஒருவர் கிரேக்க நாட்டிற்குச் செல்வது, 1291 ஆண்டுகளுக்குப்பின், அதுவே முதல்முறை.

கத்தோலிக்கத் திருஅவை, 1204ம் ஆண்டு, கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையை விலக்கிவைத்ததால் உருவான காயங்களுக்கு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இந்த திருத்தூதுப் பயணத்தின்போது, மன்னிப்புகேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைப்பிரசு நாட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
சைப்பிரசு நாட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 35வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக அமையும் சைப்பிரசு நாட்டிற்கு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2010ம் ஆண்டு, ஜூன் 4 முதல் 6 முடிய திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்குச் செல்லும் இரண்டாவது திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ ஒன்றிப்பை உறுதிப்படுத்துவது, குறிப்பாக, ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் கத்தோலிக்கத் திருஅவை, இன்னும் ஆழமான உறவையும், ஒரே அப்பத்தில் பகிரும் திருவிருந்தையும் அடைவது, மூன்று திருத்தந்தையரின் திருத்தூதுப் பயணங்களின் முக்கிய கருத்தாக கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2021, 14:23