ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் பேரவையில் திருத்தந்தை ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் பேரவையில் திருத்தந்தை 

நிக்கோசியா ஆர்த்தடாக்ஸ் பேராலயத்தில் திருத்தந்தையின் உரை

சைப்பிரசில், முழு ஒன்றிப்பைநோக்கி நடைபயிலவும், ஆறுதலின் உடன்பிறப்புச் செய்தி மற்றும், நம்பிக்கையின் உயிருள்ள சான்றை உலகுக்கு வழங்கவும், தாழ்ச்சி மற்றும், துணிச்சலை கடவுளிடம் இறைஞ்சுகிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நிக்கோசியாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர் பேரவையைச் சந்தித்த வேளையில், அவர்களுக்கு வழங்கிய உரை:

சகோதர ஆயர்களே, கத்தோலிக்க திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் இடையே நிலவும் அப்போஸ்தலிக்க துவக்கத்தை எண்ணிப்பார்க்கிறேன். புனித பவுல், சைப்பிரசைக் கடந்துவந்து, உரோம் நகரை அடைந்தார். ஆகவே, நாம் இருவரும், ஒரே திருத்தூதரின் திருப்பணி ஆர்வத்தின் வழிவந்தவர்கள். நற்செய்தியின் பாதை நம்மை இணைக்கிறது. அதே பாதையில், உடன்பிறந்த நிலையையும், ஒன்றிப்பையும் நோக்கி நாம் நடைபோடவேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். இவ்வேளையில், புனித பர்னபாவைக்குறித்து சிந்திக்க விரும்புகிறேன்.

'பர்னபா' என்பது, 'ஆறுதலின் மகன்' என்றும், 'நன்மதிப்புரையின் மகன்' என்றும் பொருள்படும். நற்செய்தி அறிவிப்புக்கு இந்த இரு பண்புகளுமே முக்கியத்துவம் நிறைந்தவை. மனிதகுலத்திற்கு நற்செய்தியைக் கொணரும்போது, தனிப்பட்ட சந்திப்புக்களின் பாதை முக்கியத்துவம் நிறைந்தது. நாம் சந்திக்கும் மக்களின் கேள்விகள், மற்றும் அவர்களது தேவைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில், நற்செய்தியை வழங்குவது என்பது, வெறும் வார்த்தைகளால் அல்ல, மாறாக, ஒன்றிப்பின் வழியாக. இவ்வேளையில், கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுக்கு இடையே நிலவும் இறையியல் உரையாடல் அவை ஆற்றிவரும் பணிகளுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

நாம் இருவரும் ஒருவரையொருவர் நன்முறையில் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வாய்ப்புக்கள் மேலும் பிறக்கும் என்ற என் நம்பிக்கையை வெளியிடுகிறேன். கடவுள் நமக்கு வழங்கும் ஆறுதலுடன், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போம். எனது, மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் அருகாமையையும், இறைவேண்டலையும், உங்களுக்கு வழங்குகிறேன். உங்களின் துயரங்களும் மகிழ்வும், எங்களுடையதாக இருக்கட்டும். அதேவேளை, உங்களின் இறைவேண்டல்கள் எங்களுக்குத் தேவை.

தனக்குள்ள நிலத்தை விற்று, அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்த (தி.பணிகள் 4:37) புனித பர்னபாவின் செயல், நமக்கு, தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டு. தனக்குள்ளதையெல்லாம் திருத்தூதர்களின் காலடியில் வைத்ததன் வழியாக, அவர்களது இதயங்களில் அவர் நுழைகிறார்.

நாம் நம் சகோதரர்களின்முன் பணிவுடன் இருப்பதை கடவுள் நம்மிடம் கேட்கிறார். தாழ்ச்சி என்ற பண்பு, நம்மை நெருக்கமாகக் கொணரும். இறைவனின் பாதையை தேர்ந்துகொள்ளும் ஞானத்தையும், மனவுறுதியையும் இறைவன் நமக்கு வழங்குவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2021, 15:48