இயசுவைப் பின்பற்றுவதன் வழி, உள்மன விடுதலை

இருளிலும் ஒளியை நம்பிக்கையுடன் தேடுபவர்களாக, இடிபாடுகளின் மத்தியில் கட்டியெழுப்புபவர்களாக, கனவு காண வல்லவர்களாக இளையோர் செயல்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய துயர அலைகளுக்கு எதிராக, குறுக்கு வழிகளையும் பொய்முகங்களையும் கைக்கொள்ளாமல், நிமிர்ந்து நின்று செயல்படுமாறு இளையோருக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கிறிஸ்து அரசர் பெருவிழா, மற்றும் மறைமாவட்ட அளவிலான இளையோர் நாள் கொண்டாட்டங்களையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் முதல் இரு வாசகங்களில் வரும், ‘அவர் மேகங்கள் சூழ வருகின்றார்’ (தி.வெ. 1:7; தானி 7:13), என்ற உருவகமும், ‘நான் அரசன்’ என நற்செய்தியில் வரும் உருவகமும், இளையோர் தாங்கள் 2023ம் ஆண்டில் லிஸ்பன் நகரில் இடம்பெறவிருக்கும் உலக இளையோர் நாளில் பங்குகொள்ளத் துவக்கியுள்ள பாதையில் ஆழமாக சிந்திக்கப்படவேண்டியவை என கேட்டுக்கொண்டார்.

இவ்விரு உருவகங்களையும் ஆழமாக சிந்திக்கும் இளையோர், நம் வாழ்வின் இறுதி வார்த்தை இயேசுவுக்கே சொந்தமானது என்பதை உணர்ந்தவர்களாக, எத்தகைய இருளிலும் ஒளியை நாடிக் காத்திருந்து வெற்றிபெறுவோம் என கேட்டுக்கொண்டார்.

மேகத்துடன் இறைவன் வருவதை தன் இரவு காட்சிகளில் கண்ட இறைவாக்கினர் தானியேல்போல், இருளின் பிடியிலிருக்கும்போதும், நம்பிக்கையுடன் ஒளியைத் தேடுவோம் என  இளையோருக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்தும் வீழ்ச்சியடைந்துவரும் இன்றைய காலக்கட்டத்தில், இளையோர் ஒவ்வொருவரும் எத்தகைய இருளிலும் ஒளியை நம்பிக்கையுடன் தேடுபவர்களாக, இடிபாடுகளின் மத்தியில் கட்டியெழுப்புபவர்களாக, கனவுகாண வல்லவர்களாக செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் தங்கள் வாழ்வின் கனவாக இயேசுவைக் கொண்டிருப்பது, அவர்களுக்கும், திருஅவைக்கும், உதவுவதாக இருக்கும் என மேலும் உரைத்தார்.

உண்மைவழி பிறந்த உறுதியுடன், தன்னை அரசர் என அறிவித்த இயசுவைப் பின்பற்றுவதன் வழியாக, நாம் உள்மன விடுதலையைப் பெறமுடியும் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வை முழுமையாக வாழும் வகையில் செயல்படுவோம் என்ற அழைப்பை விடுத்தார்.

இயேசு வழங்கிய விடுதலையுடன், உண்மையுள்ளவர்களாக, சமுதாயத்தில் விமர்சிக்கும் மனச்சான்றாக செயல்படுவோம் என இளையோருக்கு அழைப்பு ஒன்றை விடுத்து தன் மறையுரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2021, 12:56