Bariயில் திருத்தந்தை 23.02.2021 Bariயில் திருத்தந்தை 23.02.2021 

மத்தியதரைப் பகுதியின் ஆயர்கள், மற்றும் மேயர்களுடன் திருத்தந்தை

நவீன உலகின் சவால்களை எதிர்கொள்வதில் மத்தியதரைப் பகுதியின் ஆயர்களும் அரசு அதிகாரிகளும் இணைந்த அர்ப்பணத்துடன் செயலாற்றுவதைப் புதுப்பிக்க உதவும் கூட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி, இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில், மத்தியதரைக்கடல் நகர்களின் ஆயர்கள், மேயர்கள், மற்றும் இப்பகுதியின் குடியேற்றதாரர் மற்றும், புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களை சந்தித்து உரையாட உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்தியதரைக் கடலின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள நகர்கள் மற்றும் சமுதாயங்கள் எதிர்நோக்கிவரும் பாதிப்புகள் குறித்து அப்பகுதி திருஅவைத் தலைவர்களுடனும், உயர் அரசு அதிகாரிகளுடனும் உரையாட விரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுடன் மத்தியதரைக்கடல் பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியதரைக்கடல் பகுதியின் திருஅவைத் தலைவர்களையும் அரசு நிர்வாகத் தலைவர்களையும் ஒன்றிணைத்து திருத்தந்தை எடுக்கவுள்ள இந்த முயற்சிக்கு, இத்தாலிய ஆயர் பேரவையின் நன்றியை வெளியிடுவதாக, அப்பேரவையின் தலைவர், கர்தினால் Gualtiero Bassetti அவர்கள் தெரிவித்தார்.

'மத்தியதரைப் பகுதி: அமைதியின் எல்லைப்புறம்' என்ற தலைப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி இத்தாலியின் Bari நகரில், மத்தியதரைப் பகுதியின் ஆயர்களோடு இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்திய செபத்துடன் கூடிய கலந்துரையாடல் குறித்து நினைவூட்டிய கர்தினால் Bassetti அவர்கள், பிளாரன்ஸ் நகரில் வரும் ஆண்டு இடம்பெற உள்ள, ஆயர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் இந்த கூட்டத்தில் திருத்தந்தை நேரடியாகக் கலந்துகொண்டு இம்முயற்சியை ஆசீர்வதிக்க உள்ளார் என தெரிவித்தார்.

நவீன உலகின் சவால்களை எதிர்கொள்வதில் மத்தியதரைப் பகுதியின் ஆயர்களும் அரசு அதிகாரிகளும் இணைந்த அர்ப்பணத்துடன் செயலாற்றுவதைப் புதுப்பிக்க உதவுவதாக, திருத்தந்தையுடன் இடம்பெறும் 2022 பிப்ரவரி மாத சந்திப்பு இருக்கும் எனவும் தெரிவித்தார் கர்தினால் Bassetti.

ஒன்றிணைந்த வாழ்வின் பாதையை ஊக்குவிக்க, உடன்பிறந்த உணர்வுடன் கூடிய உறவுகளை பின்னி இணைப்பதாலேயே இயலும் என கூறும் கர்தினால் பசெத்தி அவர்கள், மத்தியதரைக் கடலின் கரையோரங்கள் வெறும் எல்லைகளாக அல்லாமல், ஒன்றிப்பின் அடையாளங்களாக இருக்கட்டும் என்பதை பிளாரன்ஸ் நகர் கூட்டத்திலிருந்து துவங்குவோம் என கேட்டுள்ளார்.

பிப்ரவரி மாதம் 27ம் தேதி பிளாரான்ஸ் நகரில், மத்தியதரைப் பகுதி ஆயர்களையும், மேயர்களையும் சந்தித்து அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றதாரரின் குடுமப அங்கத்தினர்கள் ஏறக்குறைய 50 பேரைச் சந்தித்தபின், அந்நகரின் திருச்சிலுவை பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி, அக்கோவில் வளாகத்தில் நண்பகல் மூவேளை செபவுரையும் வழங்குவார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2021, 15:14