திருத்தந்தை பிரான்சிஸ் (புதன் மறைக்கல்வியுரை 241121) திருத்தந்தை பிரான்சிஸ் (புதன் மறைக்கல்வியுரை 241121)  

ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு கனவு காணுங்கள்

வறியோரின் உரிமைகள், கலாச்சார வளமை, பூமிக்கோளத்தின் இயற்கை அழகு ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற, மற்றும், கடவுளின் அன்பின் நற்செய்தியை வரவேற்கின்ற, ஒரு சமுதாயத்தைக் கனவு காணுங்கள் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள், மற்றும், படைப்பு ஆகியவற்றின் சார்பாக, நம்பிக்கையின் பாதைகளில் ஒன்றிணைந்து கனவுகாணுங்கள், மற்றும், பயணம் மேற்கொள்ளுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரெஞ்சு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டு தலத்திருஅவை, நவம்பர் 26, இவ்வெள்ளி முதல், நவம்பர் 28 இஞ்ஞாயிறு முடிய, “வருங்காலம் பற்றி கனவு காண்பதற்கு துணிவுகொள்ளுங்கள்: மக்கள், மற்றும் பூமி மீது அக்கறை காட்டுங்கள்” என்ற தலைப்பில் கொண்டாடிவரும் 95வது சமுதாய வாரங்கள் என்ற நிகழ்வுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, கனவு காண்பதற்கு அஞ்சக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இச்செய்தியில், நாம் காணுகின்ற கனவுகள், பகிர்தல் மற்றும்,  ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றைக் கொண்டிருந்தால், அஞ்சத் தேவையே இல்லை எனவும், வருங்காலம்பற்றி கனவு காணும்போது, எதிர்கொள்ளும் எதார்த்தநிலையில் கவனம் செலுத்துங்கள் எனவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

ஒன்றிணைந்து கனவு காண்பது

அன்புள்ள அமேசான் (Querida Amazonia) என்ற திருத்தூது அறிவுரை மடலில் கனவுகள்பற்றி தான் கூறியிருப்பதிலிருந்து உள்தூண்டுதல் பெறுமாறு கூறியத் திருத்தந்தை, வறியோரின் உரிமைகள், கலாச்சார வளமை, பூமிக்கோளத்தின் இயற்கை அழகு ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற, மற்றும், இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பின் நற்செய்தியை வரவேற்கின்ற, சமுதாயம் ஒன்றைக் கனவு காணுங்கள் என்று கூறியுள்ளார்.

இத்தகைய கனவுகள் பகிர்ந்துகொள்ளப்படும்போது மட்டுமே, அவை உண்மையான கனவுகளாக மாறும் எனவும், இதற்கு, இந்த சமுதாய வார நிகழ்வுகள், பிரெஞ்சு மக்களுக்கு உதவியாக இருக்கும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலகிற்கு கிறிஸ்தவ நம்பிக்கை

நம் வாழ்வுமுறை மாறவேண்டும் என்பதை, கோவிட் பெருந்தொற்று நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது என்றும், மக்கள், நம்பிக்கையில் வாழவிரும்பும் ஒரு வருங்காலத்தை நாம் கனவு காணவேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நாம், இக்கால உலகிற்கு, நம்பிக்கை என்ற அழகான புண்ணியத்தைக் கொணரமுடியும் என்றும், சமுதாயம் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டுவரும் பிரெஞ்சு மக்களை, ஆண்டவர் வழிநடத்துவாராக என்றும் வாழ்த்தி, தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2021, 15:30