வத்திக்கான் நூலகத்திலுள்ள கண்காட்சி வத்திக்கான் நூலகத்திலுள்ள கண்காட்சி 

திருத்தந்தை: புதிய வத்திக்கான் கண்காட்சி அழகுக்குச் சான்று

2022ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி வரை பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்படும் கண்காட்சியை, ஒவ்வொரு செவ்வாய் மற்றும், புதன்கிழமைகளில், மாலை 4 மணி முதல் 6 மணி வரை பார்வையிடலாம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் நூலகத்தின் ஒரு புதிய முயற்சியாக, உருவாக்கப்பட்டுள்ள 'அனைவரும்: பயணிக்கும் மனித சமுதாயம்' என்ற கண்காட்சியை, நவம்பர் 05  இவ்வெள்ளி மாலையில் திறந்துவைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழகு மற்றும், கலாச்சாரத்தின் முக்கியத்துவத்திற்குத் திருஅவை சான்றுபகருமாறு கேட்டுக்கொண்டார்.

அழகு ஆன்மாவைத் தொடுகிறது

அழகு என்பதை மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை, அழகு என்பது வெளித்தோற்றம், அல்லது நகைகளால், உடனடியாக வெளிப்படும் ஒரு மாயை அல்ல, மாறாக, அழகை ஒத்த சொற்களாகிய, நன்மைத்தனம், உண்மை, மற்றும் நீதியின் வேர்களிலிருந்து பிறப்பதாகும் என்று கூறினார்.

மனிதருக்கு உணவும், கலாச்சாரமும் தேவைப்படுகின்றன, இவை, ஆன்மாவைத் தொடுகின்றன மற்றும், அவை, மனிதருக்கு, அதிகளவில் மாண்பையும் கொணர்கின்றன என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ வரலாற்றை புதிய மொழிகளில் வழங்கும் அதேவேளை, பழமையையும் காக்குமாறு வத்திக்கான் நூலகத்தின் பொறுப்பாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

மனித வரலாறு மற்றும், கனவுகள் வழியாக பயணம்

உடன்பிறந்த உணர்வு, சமூக நட்புறவு, மற்றும் பொதுநலனை, மீண்டும் கண்டுணர்வதற்கு, மனித சமுதாயத்திற்குப் புதிய வரைபடங்கள் தேவைப்படுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, இதற்கு மாறான இறுக்கமான மனநிலை, மலட்டுத்தன்மை மற்றும், முற்றிலும் நிச்சயமற்ற நிலையைக் குறிப்பிடுகிறது என்று கூறினார்.

மக்கள் அனைவரின் பன்மைத்தன்மையை துணிவோடு ஏற்கும் மனநிலையைக்கொண்ட புதியதோர் அழகு நமக்குத் தேவைப்படுகின்றது என தன் உரையில் கூறியத் திருத்தந்தை, இந்த உரைக்குப்பின்னர், சிறிதுநேரம் செலவிட்டு, இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டார்.

வத்திக்கான் நூலகத்தில் புதிய கண்காட்சி

2022ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி வரை பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்படும் இந்த கண்காட்சியை, ஒவ்வொரு செவ்வாய் மற்றும், புதன்கிழமைகளில், மாலை 4 மணி முதல் 6 மணி வரை பார்வையிடலாம். நுழைவுக் கட்டணச் சீட்டை, வத்திக்கான் நூலகத்தின் வலைத்தளம் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'அனைவரும் உடன்பிறந்தோர்' என்று பொருள்படும் Fratelli Tutti திருமடலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் ஒரு பகுதியில் பசுமையான வெப்பமண்டலக் காடுகள் பற்றிய கலைகளும், Evliya Çelebi அவர்கள் உருவாக்கிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த, 6 மீட்டர் நீளமுடைய நைல் நதி பற்றிய வரைபடமும், திருவாளர் Ruffo அவர்கள் உருவாக்கிய கற்பனையான மற்றும், உருவக வரைபடங்களும் இடம்பெற்றுள்ளன.

சமகால கலைகளுக்கு அர்ப்பணித்து, 'அனைவரும்: பயணிக்கும் மனித சமுதாயம்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி வழியாக, வத்திக்கான் நூலகம் முதன் முறையாக பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சி அரங்கம், அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த மனித நேயப் புரவலர் Kirk Kerkorian அவர்கள் வழங்கியுள்ள நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி, Pietro Ruffo என்ற இத்தாலிய கலைஞரால் உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2021, 15:05