பானமா திருத்தூதுப் பயணத்தில் HOGAR BUEN இல்லத்தில் திருத்தந்தை பானமா திருத்தூதுப் பயணத்தில் HOGAR BUEN இல்லத்தில் திருத்தந்தை 

எய்ட்ஸ் நோயாளர் மத்தியில் பணியாற்றிய கத்தோலிக்கருக்கு நன்றி

அமெரிக்க ஐக்கிய நாட்டில் எய்ட்ஸ் நோய் உச்சகட்டத்தில் இருந்தபோது, தங்களது உயிரை துச்சமெனக் கருதி பணியாற்றிய கத்தோலிக்கர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தும் இரக்கச் செயல்களை ஆற்றியவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

1980கள் மற்றும், 1990களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் HIV மற்றும், AIDS நோய் உருவாக்கிய கடும் அச்சுறுத்தல்கள் மத்தியில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றிய கத்தோலிக்கருக்கு நன்றி தெரிவித்துள்ள அதேநேரம், அக்கத்தோலிக்கர்பற்றி ஆய்வுமேற்கொண்ட அமெரிக்க பத்திரிகையாளர் Michael J. O’Loughlin அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

மறைந்திருக்கும் இரக்கம்: அச்சத்தின் முகத்தில் சொல்லப்படாத பரிவிரக்கக் கதைகள் என்ற தலைப்பில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் பரவியக் காலக்கட்டத்தில், நற்பணியாற்றிய அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார், அமெரிக்க பத்திரிகையாளர் O’Loughlin. இம்மாதம் 30ம் தேதி வெளியிடப்படவுள்ள இந்நூலின் பிரதி ஒன்றையும், தனது பணி பற்றிய மடல் ஒன்றையும், இவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியிருந்தார். இந்நூலில் தான் பதிவுசெய்துள்ள நபர்கள், உண்மையிலேயே நம்புவதற்கரிய பணிகளை ஆற்றியவர்கள் என்றும், Michael J. O’Loughlin அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எய்ட்ஸ் நோய் உச்சகட்டத்தில் இருந்தபோது, தங்களது உயிரை துச்சமெனக் கருதி பணியாற்றிய இவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தும் இரக்கச் செயல்களை, அவர் தலைமைப் பணியை ஏற்கும்முன்னரே ஆற்றியவர்கள் என்பதால், அவர்கள்பற்றி திருத்தந்தை அறியவேண்டும் என்பதற்காக அந்நூலை திருத்தந்தைக்கு அனுப்பிவைத்ததாகவும் O’Loughlin அவர்கள் கூறியுள்ளார்.

HIV நோய்க் கிருமிகள், மற்றும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களோடு உடன்பயணித்து அவர்கள் வாழ்வில் ஒளியைச் சுடர்விடச் செய்த, பல அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலை கத்தோலிக்கர் வழங்கிய சாட்சியங்களை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி தெரிவிப்பதாக, அந்த மடலில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2021, 15:28