பவுல் குடும்பத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் பவுல் குடும்பத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

பவுல் குடும்பத்தின் பல்வேறு அங்கத்தினர்களுடன் திருத்தந்தை

“அன்னையாம் திருஅவை புதிய உத்வேகத்துடன் தன்னையே வெளிப்படுத்துவதற்குத் தேவையான கருவிகளையும் வழிகளையும் அருள்பணி Alberione அவர்கள் வழங்கியுள்ளார்” - திருத்தந்தை புனித 6ம் பவுல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருளாளர் James Alberione வழியே தூய ஆவியார் ஆற்றியுள்ள அனைத்து நன்மைகளையும், குறிப்பாக, புதிய வழி நற்செய்தியை அறிவித்தலுக்கு அவர் வழங்கியுள்ள பங்களிப்பையும் நினைவுகூர இவ்வாண்டு தகுந்தததொரு தருணம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பவுல் குடும்பத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் கூறினார்.

அருளாளர் Alberione அவர்கள் இறையடி சேர்ந்த 50ம் ஆண்டு நிறைவை, இவ்வாண்டு சிறப்பித்துவரும் பவுல் குடும்பத்தின் பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தோரின் பிரதிநிதிகள் 150 பேரை, நவம்பர் 25 இவ்வியாழனன்று, திருப்பீடத்தின் கிளமெந்தீனா அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய வாழ்த்துரையில் இவ்வாறு கூறினார்.

“அன்னையாம் திருஅவை புதிய உத்வேகத்துடன் தன்னையே வெளிப்படுத்துவதற்குத் தேவையான கருவிகளையும் வழிகளையும் அருள்பணி Alberione அவர்கள் வழங்கியுள்ளார்” என்று திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் கூறிய சொற்களை, மேற்கோளாகக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சொற்கள், பவுல் குடும்பத்தினரின் தனித்துவத்தை உணர்த்திவருகிறது என்று கூறினார்.

திருத்தூதரான புனித பவுல், இந்த துறவு குழுமத்தை உருவாக்கியவர் என்பதை Alberione அவர்கள் அடிக்கடி கூறிவந்துள்ளதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இயேசுவைப் பின்பற்றுவதற்கும், அவரது நற்செய்தியை அறிவிப்பதற்கும் புனித பவுல், இக்குழுமத்தினர் அனைவருக்கும் ஓர் உந்துசக்தியாக தொடர்ந்து இயங்கிவருகிறார் என்று எடுத்துரைத்தார்.

புனித பவுல் குடும்பத்தைச் சேர்ந்த இருபால் துறவியர், மற்றும் பொதுநிலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் செய்துவரும் பணிகளை குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு பிரிவினரும் ஆற்றும் தனிப்பட்ட பணிகள், திருஅவைக்கு மிகவும் தேவைப்படும் பணிகள் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட்ட இவ்வுலகில் பயணம் செய்யும் திருஅவை, தொடர்புத்துறையைச் சேர்ந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதை நினைவுறுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பவுல் குடும்பத்தினருக்கு திருத்தந்தை தன் நன்றியை வெளிப்படுத்தினார்.

திருஅவை முழுவதும், உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு தன்னையே தயாரித்துவரும் இத்தருணத்தில், தொடர்புக்கருவிகள் துறையில், பவுல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றக்கூடிய பணி இன்னும் முக்கியமாக மாறியுள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2021, 14:30